தாம்பரம்: வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை கண்டெய்னர்களில் இருந்து நூதன முறையில் திருடி வந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.75 கோடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக தனிப்படை போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
தாம்பரம் சானடோரியத்தில் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் இயங்கி வருகிறது. இங்குள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ஆக. 18-ம் தேதி, 14,400 கிலோ மருந்து பொருட்கள் கண்டெய்னர் லாரி மூலம் ஜெர்மன் நாட்டுக்கு அனுப்பப்பட்டன. இதனிடையே கண்டெய்னர் லாரியில் இருந்து நூதன முறையில் பொருட்கள் திருடப்படுவதாக நிறுவனத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நிறுவன அதிகாரிகள் சென்னை துறைமுகத்தில் பொருட்களை எடை போட்டதில் 4,800 கிலோ எடை குறைவாக இருந்தது. இதன் மதிப்பு ரூ.98 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் தாம்பரம் துணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதில் 7 பேர் கொண்ட கும்பல் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்படி, திருவாரூர் கூத்தாநல்லுாரைச் சேர்ந்த சதீஷ்குமார், நீலமங்கலம் மாறன் என்கிற இளமாறன், திருவெற்றியூர் கார்த்திக், தண்டையார்பேட்டை முணியான்டி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதுதவிர ராஜேஷ், சங்கர், சிவபாலன் ஆகிய மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இக்கும்பல், கண்டெய்னர்களில் உள்ள சீலை அகற்றாமல், சீலுக்கு மேல் மற்றும் கீழ் உள்ள அச்சாணிகளை அகற்றி பொருட்களின் ஒரு பகுதியை திருடிவிட்டு புதிய அச்சாணிகளை பொருத்தியது தெரியவந்தது. திருடிய பொருட்களை, மீஞ்சூர் அருகேயுள்ள கவுண்டர்பாளையத்தில் பதுக்கி வைத்து பின்னர் விற்று பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள மருந்து பொருட்கள், ஆம்பூரில் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 ஆயிரம் ஜோடி காலணிகள், திருப்போரூரில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1,100 கீ போர்ட் என ரூ.2.75 கோடி மதிப்புள்ள பொருட்களை இக்கும்பல் திருடியுள்ளது. மேலும், இதே கும்பல் கடந்த ஜூலை மாதம் 2,800 ஜோடி காலணிகளை பல்வேறு பகுதிகளில் இருந்து திருடியுள்ளது. இவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருட்டில் ஈடுபட்டவர்களை பிடித்த தனிப்படை போலீஸாருக்கு பாராட்டு தெரிவித்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏற்றுமதி பொருட்கள், பல துறைமுகங்களை கடந்து செல்வதால், எங்கு திருடப்பட்டது என்பது தெரியாமல் புகார் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.
இதை பயன்படுத்தியே இக்கும்பல் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளது. பொருட்களை அனுப்பும் நிறுவனங்கள் ஜி.பி.எஸ். கருவி பொருத்தி வாகனம் செல்லும் பாதை மற்றும் உரிய நேரத்தில் செல்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago