ரூ.6 கோடி மதிப்பில் திருடிய பலே திருடர்கள்: ரூ.100 பேடிஎம் பரிவர்த்தனையால் கைதான கதை!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிய பலே திருடர்களை வெறும் 100 ரூபாய் பேடிஎம் பரிவர்த்தனையை அடிப்படையாக கொண்டு கைது செய்துள்ளனர் டெல்லி போலீசார். அது எப்படி என்பதை பார்ப்போம்.

தலைநகர் டெல்லியில் கடந்த புதன்கிழமை அன்று அதிகாலை இரண்டு நபர்களின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, அவர்களிடமிருந்த 6 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, வைரம் போன்றவற்றை 4 பேர் அடங்கிய கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த குற்றச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் தெரிகிறது. இந்தச் சம்பவம் மத்திய டெல்லியில் உள்ள பஹார்கஞ்ச் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பொருளை பறிகொடுத்தவர்கள் இருவரும் டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் ஊழியர்கள். அவர்கள் இந்த புகாரை கொடுத்துள்ளனர். கொள்ளையர்களில் ஒருவர் போலீஸ் உடையில் பார்சலை செக் செய்ய வேண்டும் என சொல்லி அவர்களை நிறுத்தியதாக புகாரில் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் வந்து பார்சல் பையை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் போலீசாரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் 700-க்கும் மேற்பட்ட காட்சிகளை போலீசார் விசாரணையின் போது சோதனையிட்டுள்ளனர். சுமார் 7 நாட்களின் காட்சிகள் அவை என சொல்லப்பட்டுள்ளது. அதில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 4 பேர் அந்த பகுதியில் நடமாடுவதை போலீசார் கவனித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் அங்கிருந்த டாக்சி ஓட்டுனரிடம் பேசி உள்ளார். அப்போது அந்த நால்வரில் ஒருவர் அந்த ஓட்டுநருக்கு 100 ரூபாய் பேடிஎம் மூலம் அனுப்பி, அதற்கான தொகையை ரொக்கமாக பெற்றுள்ளார். தேநீர் குடிக்க வேண்டி இந்த பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிவர்த்தனையை அடிப்படையாக வைத்து இந்த குற்ற செயலை செய்தவர்களை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பேடிஎம் பரிவர்த்தனையை வைத்து மேற்கொள்ளப்பட்ட போலீஸ் விசாரணையில் அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உடனடியாக ஜெய்ப்பூருக்கு தனிப்படை விரைந்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 6,270 கிராம் தங்கம், 3 கிலோ வெள்ளி மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். நாகேஷ் குமார் (28), சிவம் (23) மற்றும் மனிஷ் குமார் (22) ஆகியோர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச் செயலுக்கு நாகேஷ் குமார் மூளையாக இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE