திருக்குவளை | 40 ஆண்டுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு: மேலும் 11 சிலைகளை தேடும் பணி தீவிரம்

By செய்திப்பிரிவு

சென்னை: நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர், தேவி சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே கோயிலில் இருந்து திருடப்பட்ட மேலும் 11 சிலைகள் எங்கு உள்ளன என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுகா பண்ணத் தெருவில் பழமை வாய்ந்த பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் இருந்த வெண்கல விநாயகர் சிலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனது.

இத தொடர்பாக தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் மேற்பார்வையில், கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் இந்திரா தலைமையிலான தனிப்படை போலீஸார் தொடர் விசாரணை நடத்தினர். ஆனால், இந்த விநாயகர் சிலை தொடர்பாக கோயிலில் எந்த குறிப்புகளும் இல்லை.

இதையடுத்து, 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட கோயில் தல வரலாற்றுப் பதிவுகள், சுவாமி சிலைகளின் புகைப்படத் தொகுப்புகள் இருக்கும் புதுச்சேரிகலைப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை போலீஸார் அணுகினர். அங்குள்ள புகைப்படங்களை ஆய்வு செய்ததில், திருடுபோன விநாயகர் சிலையின் புகைப்படமும் இருந்தது.

அதுமட்டுமின்றி, இதே கோயிலை சேர்ந்த சோமாஸ் கந்தர், சந்திரசேகரர் - அம்மன், தேவி, அஸ்திரதேவர், பிடாரி அம்மன், போக சக்தி அம்மன், நடன சம்பந்தர், நின்ற விநாயகர் உள்ளிட்ட 11 சிலைகளின் புகைப்படங்களும் அங்கு இருந்தன.

இந்த சிலைகளும் 40 ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்டன என்ற தகவலும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய புலன் விசாரணையில், இக்கோயிலில் திருடப்பட்ட ஒரு விநாயகர் சிலை அமெரிக்காவின் நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான இந்த சிலையை, சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மற்றும் அவரது கூட்டாளிகள் கடத்தி விற்பனை செய்துள்ளனர் என்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையின் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, இக்கோயிலில் திருடுபோன தேவி சிலையையும் போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சிலையை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஓர் ஏல நிறுவனம் சுமார் ரூ.40 லட்சத்துக்கு அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் கீழ் விநாயகர், தேவி ஆகிய 2 சிலைகளையும் மீட்டு, பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இக்கோயிலில் கொள்ளை போன மற்ற சிலைகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விநாயகர், தேவி சிலைகள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE