பாசி நிதி நிறுவன மோசடி | இருவருக்கு தலா 27 ஆண்டுகள் சிறை, ரூ171.74 கோடி அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

By க.சக்திவேல்

கோவை: பாசி நிதி நிறுவனத்தின் ரூ.930 கோடி மோசடி வழக்கில், உரிமையாளர்கள் இருவருக்கு தலா 27 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.171.74 கோடி அபராதம் விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2009-ம் ஆண்டில் ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி இந்த நிறுவனம் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டது. ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திரும்ப வழங்கப்படவில்லை.

இதையடுத்து, முதலீட்டாளர்கள் அளித்த புகார் அடிப்படையில் திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், 'இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும்' என முதலீட்டாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ நடத்திய விசாரணையில், 58,571 பேரிடம் ரூ.930.71 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் இயக்குநர்களான திருப்பூரைச் சேர்ந்த மோகன்ராஜ் (43), அவரது தந்தை கதிரவன் (70) மற்றும் பங்குதாரர் கமலவள்ளி (45) ஆகியோரை அசாமில் வைத்து கடந்த 2011-ம் ஆண்டு சிபிஐ கைது செய்தது. தொடர்ந்து 2013-ம் ஆண்டு குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின் மூவரும் ஜாமீனில் வெளியே வந்ததாலும் இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நடந்துவந்த தருணத்தில், கடந்தாண்டு கதிரவன் உயிரிழந்துவிட்டார். வழக்கில் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று (ஆக.26) நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பளித்தார்.

அனைவருக்கும் வழங்க வேண்டும்

நீதிமன்றத்தின் தீர்ப்பில், "குற்றம்சாட்டப்பட்ட மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளிக்கு மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்தத் தொகையை, இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 1,402 பேர் மட்டுமல்லாது, இதர முதலீட்டாளர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ) முறையாக பிரித்து வழங்க வேண்டும். இறுதி அறிக்கையில் இதர முதலீட்டாளர்களின் பெயர் சேர்க்கப்படவில்லை என்ற காரணத்துக்காக, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகையை பிரித்து அளிக்க மறுக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் முகவரி, விவரங்களை சரிபார்த்து உரிய தொகையை சேர்க்க வேண்டும். ஒருவேளை முதலீட்டாளர்கள் உயிரிழந்திருந்தால், அவர்களின் வாரிசுகளை சிபிஐ உதவியுடன் கண்டறிந்து, விவரங்களை சரிபார்த்து பணத்தை ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிபிஐ-க்கு கண்டனம்

தொடர்ந்து அதே தீர்ப்பில், "இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற முதலீட்டாளர்களை விசாரிக்கவும், அவர்களின் வாக்குமூலத்தை பெறவும் சிபிஐ முயற்சி எடுக்கவில்லை. ஆனால், இறுதி அறிக்கையில் 58,571 முதலீட்டாளர்களிடம் ரூ.930.71 கோடி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிபிஐ-க்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது. மேலும், இந்த வழக்கில் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்றவாளிகளை விசாரிக்கவும் சிபிஐ மறுக்கக்கூடாது. ஏனெனில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கால வரம்பு இல்லை. ஒவ்வொரு புகார்தாரருக்கும் தங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல உரிமை உண்டு" இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தீர்ப்பை கேட்ட மோகன்ராஜ், “நான் பணத்தை திருப்பி அளிக்க தயாராக இருக்கிறேன். இந்த வழக்கில் முதலீட்டாளர்களுக்கு உரிய தொகையை திருப்பி அளிக்க ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டும். கால அவகாசம் இல்லாததால் என்னால் தொகையை வழங்க முடியவில்லை" என்றார். இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE