வேலை வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி: விருதுநகர் அதிமுக செயலர், முன்னாள் துணைவேந்தர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக மாவட்டச் செயலர் மற்றும் அவரது மனைவியும், முன்னாள் துணைவேந்தருமான வள்ளி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வெம் பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் நல்லதம்பி. வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றியச் செயலர். இவர், முன்னாள் சட்டப்பேரவைத் தலை வர் காளிமுத்துவின் இளைய சகோதரர்.

நல்லதம்பியின் சகோதரர் ரவிச் சந்திரன். விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலர். இவரது மனைவி வள்ளி. இவர் கொடைக் கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 2016 முதல் 2019 வரை துணைவேந்தராகப் பணியாற்றினார்.

இந்நிலையில், விருதுநகர் எஸ்.பி. மனோகரிடம், நல்லதம்பி புகார் மனு அளித்துள்ளார்.

அதில், "அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக எனது அண்ணி வள்ளி பணியாற்றியபோது, டிஎன் எஸ்இடி தேர்வு நடத்தியதில், தகுதியில்லாத பலர் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றனர்.

கொடைக்கானலைச் சேர்ந்த விஜய் என்பவர், தனது மனைவி சத்யாவுக்கு கணினி உதவிப் பேராசிரியர் பணி கிடைப்பதற்காக முன்பணம் ரூ.15 லட்சத்தை எனது சகோதரர் ரவிச்சந்திரன், மனைவி வள்ளி ஆகியோரிடம் என் மூலம் கொடுத்தார். இதேபோல, உதவிப் பேராசிரியர், எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்காக லட்சக்கணக்கில் பணம் பெற்றனர்.

ஆனால், யாருக்கும் பணி வழங்கவில்லை. பணத்தை திருப்பிக்கேட்டபோது, ரூ.25 லட்சம் மட்டுமே கொடுத்தனர். பலரிடம் சுமார் ரூ.70 லட்சம் மோசடி செய்துள்ளனர். எனவே, ரவிச்சந்திரன், அவரது மனைவி வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரவிச்சந்திரன், வள்ளி மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE