கள்ளக்குறிச்சி | சின்னசேலம் பள்ளி தாளாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுவை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 பயின்ற மாணவி ஜூலை 13-ம் தேதி சந்தேகத்துக்கிடமான வகையில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி உயிரிழப்பு வழக்குத் தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கர், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி ஏற்கெனவே இருமுறை தாக்கல் செய்த மனுக்களை விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து 3-வது முறையாக கடந்த 10-ம் தேதி தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் மற்றும் மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், 5 பேரின் ஜாமீனுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனிடையே பள்ளித் தாளாளர் ரவிக்குமார், தங்களது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே காலதாமதமின்றி மனுவை விசாரிக்க உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இது நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சதீஷ்குமார், வழக்கை விசாரித்து, வழக்கை இம்மாதம் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்த நிலையில், நேற்று விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி 3-வது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE