சென்னை: அரும்பாக்கம் வங்கி கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கிய நபரான வங்கி மேலாளர் முருகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில், பெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான பெட் வங்கி நிதிச் சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த 31.7 கிலோ தங்க நகைகள் கடந்த 13-ம் தேதி கொள்ளை போனது.
பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளை சம்பவம் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வங்கியின் கிளை மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில், அரும்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்ட னர். இதில், கொள்ளையில் ஈடுபட்டது அதே வங்கியில் மண்டல மேலாளராகப் பணிபுரிந்த முருகன் என்பவர் மூளையாகச் செயல்பட்டதும், 10 நாட்களாக திட்டமிட்டு, கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது.
கொள்ளை நடந்த 24 மணி நேரத்துக்குள், சென்னை வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (30), அதே பகுதி மண்ணடி தெருவைச் சேர்ந்த பாலாஜி (28) ஆகியோர் முதலில் சிக்கினர். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும்.
மேலும், இந்த கொள்ளை சம்பவத்துக்கு உதவியாக இருந்த செந்தில் குமரன் என்பவரையும் போலீஸார் பிடித்தனர். இவர்களிடம் இருந்து 2 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் நேற்று காலை அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. அங்குள்ள அறையில், 18 கிலோ தங்க நகைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், வடசென்னை காவல்கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் விஜயகுமார் ஆகியோர் நேற்று காவல் நிலையம் வந்து நகைகளைப் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் கூறியதாவது:
கடந்த 13-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு பெட் வங்கியின் நிதிச் சேவைகள் மையத்தில் 31.7 கிலோதங்க நகைகள் கொள்ளை போனது.கொள்ளை நடந்த 20 நிமிடத்தில், வாடிக்கையாளர் ஒருவர் மூலம் காவல் துறைக்கு தகவல் வந்தது. உடனே, அங்கு சென்ற போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
வங்கியில் 2 ஊழியர்களும், ஒரு காவலாளியும் இருந்துள்ளனர். அதே வங்கியில் பணிபுரிந்த முருகன் என்பவர், கூட்டாளிகள் 3 பேருடன் உள்ளே சென்றுள்ளார். பின்னர், ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்து நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கர் அறையின் சாவியைப் பறித்துக்கொண்டு, ஊழியர்களை ஒரு அறையில் போட்டு அடைத்து வைத்துள்ளார்.
பின்னர், லாக்கரைத் திறந்து 31.7 கிலோ தங்க நகைகளை 2 பெரிய பைகளில் அள்ளிக்கொண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கண்காணிப்புக் கேமராவில் எதுவும் பதிவாகக் கூடாது என்பதற்காக, அதன் மீது ‘ஸ்பிரே' அடித்துள்ளனர். இருந்தாலும், கொள்ளையர்கள் உள்ளே வந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
கொள்ளையர்களை பிடிப்பதற்காக 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு படையினரும் ஒவ்வொரு பணியை செய்தனர். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில்,சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 10 நாட்களாகவே இந்தகொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட முருகன், சந்தோஷ், பாலாஜி, சூரியா ஆகியோர் ஒரே பள்ளியில் படித்தவர்கள். முக்கிய குற்றவாளியான முருகனைத் தவிர மேலும் 4 பேருக்குஇந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறது. அவர்களையும் தேடி வருகிறோம்.
அலாரம் ஒலிக்கவில்லை
லாக்கரை திறக்கும்போது, வங்கியில் உள்ள அலாரம் ஒலித்திருக்க வேண்டும். ஆனால், ஒலிஎழுப்பவில்லை. எனவே, அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதுபோன்று வங்கிகளில் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் அறைமுறையாக இருக்கிறதா?, பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா? என்பதை ரிசர்வ் வங்கிதான் மாதந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
கொள்ளையர்களைப் பிடிக்கும்போலீஸாருக்கு ரூ.1 லட்சம் சன்மானத்தை போலீஸ் டிஜிபி அறிவித்துள்ளார். அந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தும்படி நான் கேட்க இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, இக்கொள்ளை சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட முருகன் கொரட்டூரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
18 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
20 hours ago
க்ரைம்
21 hours ago
க்ரைம்
22 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago
க்ரைம்
8 days ago