சிவகங்கையில் புகார்தாரர்களை அலைக்கழிக்கும் குற்றப்பிரிவு போலீஸார்

By செய்திப்பிரிவு

சிவகங்கையில் குற்றப்பிரிவு போலீஸார் புகார்தாரர்களை அலைக்கழிப்பதாகவும், லஞ்சம் கேட்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

இந்த நிலையில் அப்பிரிவின் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளதால், இனியாவது புகார்தாரர்களை அலைய விடாமல் தீர்வு கிடைக்க எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் நிதி நிறுவன மோசடி, கடன் மோசடி, வெளிநாடு அனுப்புவதாக மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி போன்ற புகார்கள் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

இந்தப் பிரிவில் புகார்தாரர்களை அலைக்கழிப்பதாகவும், மோசடி செய்தவர்களுக்கு ஆதர வாகச் செயல்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு, சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் செயல்பட்டு வந்த இந்தப் பிரிவு, ஆயுதப்படை வளாகத்துக்கு மாற்றப்பட்டது.

அதன்பிறகு புகார்தாரர்களை விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அலுவலகம் வரவழைத்து அலைக்கழிப்பது அதிகரித்தது. அதோடு லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் ஆயுதப் படை வளாகத்துக்குச் செல்ல பேருந்து வசதியும் இல்லை. இதனால் பலர் தாங்கள் இழந்த பணமே வேண்டாம் என்ற மனநிலைக்கு மாறினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கு ஒன்றை ரத்து செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இனியாவது புகார்தாரர்களை அலைய விடாமல் தீர்வு கிடைக்க எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE