திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை 2,952 சைபர் கிரைம் வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய மண்டல ஐ.ஜியின் முயற்சியால் 8,351 டெலிகிராம் கிளப்புகள் உருவாக்கப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை காரணமாக சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் கிராமப்புற மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதைத் தொடர்ந்து மத்திய மண்டல காவல்துறைக்குட்பட்ட 9 மாவட்டங்களில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, கிராமங்களில் டெலிகிராம் செயலி மூலம் கிளப்புகளை ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார்.
அதன்படி, 3,118 தாய் கிராமங்கள் மற்றும் 5,233 குக்கிராமங்களில் 8351 டெலிகிராம் கிளப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், கல்லூரி மாணவர்கள், தொழில்நுட்பம் தெரிந்தவர்களைக் கொண்டு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மோசடி, இன்டர்நெட் வங்கி மோசடி உள்ளிட்ட ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக கிராம மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இதுவரை சைபர் கிரைம் தொடர்பாக என்சிஆர்பி போர்டல் மற்றும் காவல்நிலையங்களில் நேரடியாக புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை 5,704 பேர். இந்த புகார்களில் உண்மைத் தன்மை கண்டறியப்பட்டு 2,952 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக இன்டர்நெட் வங்கி சார்ந்த மோசடி தொடர்பாக 804 புகார்களும், கவர்ச்சிகரமான பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டு ஏமாந்த வகையில் 753 புகார்களும், முகநூல் வழி மோசடி தொடர்பாக 635 புகார்களும் செய்யப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,384 புகார்கள் பதிவாகி உள்ளன. இதுதவிர, கரூர் மாவட்டத்தில் 1,257 புகார்களும், திருச்சி மாவட்டத்தில் 1,123 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற மோசடிகள் அதிகரிக்காத வகையில் டெலிகிராம் செயலி மூலம் கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட தரப்பினர் உடனடியாக புகார் கொடுக்க ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் பெரும்பாலும் மத்திய பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களே குழுவாக மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சைபர் கிரைம் குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடையே இருந்தால் மட்டுமே இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க முடியும். எனவேதான் கிராமங்களில் சைபர் கிரைம் குழு அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல பாதிக்கப்பட்ட தரப்பினர் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
இதனிடையே, இணைய வழி குற்றங்களில் பாதிக்கப்படுவோருக்கு உதவும் வகையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தற்போது 'சைபர் கிரைம் பிரிவு' தொடங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர், 2 காவலர்கள் என 3 பேர் நியமிக்கப்பட்டு, சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
10 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago