சேலம்: பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு மரண தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தராபுரத்தை சேர்ந்தவர் சாமுவேல். இவரது மகள் ராஜலட்சுமி ( 14). இவர், தளவாய்பட்டி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி சிறுமி ராஜலட்சுமி பூ கட்ட நூல் கேட்டு அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவரின் வீட்டுற்கு சென்றுள்ளனர்.
அப்போது சிறுமியை தினேஷ் குமார் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து பெற்றோரிடம் தெரிவிப்பதாக கூறியதால் தினேஷ்குமார் சிறுமியை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக ஆத்தூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது போக்சோ மற்றும் குண்டர் தடுப்பு சட்டங்கள் பதிவு செய்யபட்டன. இந்த வழக்கில் சேலம் போக்சோ நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சிறுமியை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த தினேஷ் குமாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.25 ஆயிரம் அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, மரண தண்டனை விதிக்கப்பட்ட தினேஷ்குமாரை பலத்த பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர்.