ஈரோடு: வங்கி சேவை மையத்திலிருந்து பேசுவதாகக் கூறி மின்வாரிய அலுவலரிடம் ரூ.1.18 லட்சம் மோசடி

By செய்திப்பிரிவு

பெருந்துறை மின்வாரிய அலுவலரிடம் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவது போல் பேசி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.18 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் பாபு (42). இவர் பெருந்துறை கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் துணை வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு கிரெடிட் கார்டு முடக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அவர் இணையதளத்தில் இருந்த வாடிக்கையாளர் சேவைமைய நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கிரெடிட் கார்டு மீண்டும் செயல்பட ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் ரூ. 8 ஆயிரம் செலுத்தினார். சிறிது நேரத்தில் பாபுவின் கிரெடிட் கார்டு மீண்டும் செயல்படத் தொடங்கியது. பின்னர் செல்போனில் தொடர்பு கொண்ட நபர், வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாகக் கூறி ஓடிபி குறித்த விவரம் கேட்டுள்ளார்.

அவர் கேட்ட தகவலை தெரிவித்த சிறிது நேரத்தில், பாபுவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 193 பணம் எடுக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த பாபு வங்கிக் கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான் மோசடி கும்பல் தன்னை ஏமாற்றியதை உணர்ந்தார். இது குறித்து அவர் ஈரோடு சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE