பெரியதாழை பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய போலி மருத்துவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் பெரியதாழை பகுதியில் போலி மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், மருத்துவகுடியைச் சேர்ந்த தனசேகரன் மகன் சிலம்பரசன் (32) என்பவர், ‘அமுதசேகர் எலக்ட்ரோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை’ என்னும் பெயரில், அரசு அனுமதி பெறாமல் பெரியதாழை பகுதியில் சட்டவிரோதமாக மருத்துவமனை நடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இங்கு சிலம்பரசன் அலோபதி மருத்துவம் செய்துவந்துள்ளார்.

உவரி காவல் ஆய்வாளர் ஜமால் மற்றும் திருநெல்வேலி மாவட்ட நலப்பணிகள் துறை துணை இயக்குநர் ஜான்பிரிட்டோ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். சிலம்பரசனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

எலக்ட்ரோபதி பட்டதாரியான சிலம்பரசன், அலோபதி முறைப்படி மக்களுக்கு மருத்துவம் செய்துவந்தது உறுதியானது. மேலும் அங்கு எலக்ட்ரோபதி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் இருப்பதாகவும், அங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும் பொய்யாக விளம்பரம் செய்து மாணவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும், அவர் மீது கொலை வழக்கு உட்பட 11 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலி மருத்துவர் சிலம்பரசனை உவரி போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE