திருவாடானை அருகே பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

By செய்திப்பிரிவு

திருவாடானை அருகே பட்டா வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர் மணி(62). இவர் தனது ஊரில் மூன்று பேரின் பெயரில் உள்ள கூட்டுப் பட்டா வீட்டுமனைக்கு தனிப் பட்டாவாக வாங்குவதற்காக புல்லூர் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்(26) என்பவரை 3 நாட்களுக்கு முன்பு அணுகினார். அப்போது அவர் ரூ.3,000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இது குறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் மணி நேற்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுரையின்படி புல்லூரில் கிராம நிர்வாக அலுவலர் தங்கியுள்ள அறையில் ரூ.3,000-ஐ சதீஷிடம் நேற்று கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் மற்றும் போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷை கைது செய்தனர். பின்னர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE