வேலூர் தங்கும் விடுதியில் சிக்கிய போலி பெண் உதவி ஆய்வாளர்: பண மோசடியில் ஈடுபட்டது அம்பலம்

By செய்திப்பிரிவு

வேலூரில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஒன்றரை மாதங்களாக உதவி ஆய்வாளர் என போலி அடையாள அட்டை காண்பித்து பல்வேறு நபர்களிடம் பணம் மோசடிகளில் ஈடுபட்டு வந்த பெண்ணை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் வடக்கு காவல் நிலைய பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி முதல் சென்னை மாநகர குற்றப்பிரிவில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர் ரோஹினி (34) என்பவர் தங்கி இருந்து வருகிறார். ஆனால், அவர் நேற்று வரை அந்த அறையை காலி செய்யாமல் இருந்துள்ளார். அந்த அறைக்கான வாடகை மட்டும் சுமார் 20 ஆயிரம் ரூபாயை கடந்துவிட்ட நிலையில் விடுதி ஊழியர் ஒருவர் ரோஹினியிடம் சென்று எப்போது அறையை காலி செய்வீர்கள் என கேட்டுள்ளார்.

இதைக்கேட்ட ரோஹினி, அந்த ஊழியரை ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனுக்கு கிடைத்துள்ளது. அதன்பேரில், தனிப்படை காவலர்கள் அந்த குறிப்பிட்ட அந்த விடுதிக்குச் சென்று விசாரித்தபோது, அவர் சென்னை மாநகர காவல் குற்றப்பிரிவில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் இல்லை என்றும் போலியான அடையாள அட்டையை கொடுத்து அங்கு தங்கி இருப்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், அவர் திருவள்ளூர் மாவட்டம் பூங்காவனம் நகரைச் சேர்ந்தவர் என உறுதியானது.

இதையடுத்து அவரை வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திரா நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரிடம் குறைந்த விலைக்கு கார்களை வாங்கி கொடுப்பதாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ரூ.21 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும், வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்துவரும் தொரப்பாடி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த குமரன் (24) என்பவரிடம் குறைந்த விலைக்கு இரு சக்கர வாகனம் வாங்கிக் கொடுப்பதாகக்கூறி ரூ.17 ஆயிரம் பணத்தை ஏமாற்றியதும் தெரியவந்தது. தொடர்ந்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE