கோவையில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் அஜித்தின் வலிமை படம் வெளியான திரையரங்கம் முன்பு இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், கரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு இன்று (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. அஜித் ரசிகர்கள் வலிமை வெளியீட்டை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் அஜித்தின் வலிமை படம் வெளியான திரையரங்கம் முன்பு இன்று காலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா, யமுனா, காவேரி திரையரங்கு வளாகத்தில் தான் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
படம் பார்க்க ரசிகர்கள் குழுமியிருந்த போது இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடினர். .

சம்பவத்தில் இருசக்கர வாகனம் ஒன்று மட்டும் லேசாக சேதமடைந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் ஒரு குறிப்பிட்ட திரையரங்கில் காலை 7.30 மணி ஷோவுக்கான டிக்கெட் விற்பனையில் எழுந்த சலசலப்பை அடுத்து ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்குக்குள் நுழைந்து பொருட்களுக்கு சேதம் விளைவித்தனர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE