கோவை: டிப்பர் லாரி, கார் மோதியதில் புது மாப்பிள்ளை, தாய் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கோவையில் டிப்பர் லாரி, கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளையும், அவரது தாயாரும் உயிரிழந்தனர்.

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் ஷியாம் பிரசாத் (28). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சுவாதி (24) என்பவருக்கும், காதலர் தினமான கடந்த 14-ம் தேதி திருமணம் நடந்தது.

பின்னர், மணமக்கள் கோவை சுந்தராபுரத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தனர். வரும் 19-ம் தேதி சுந்தராபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிலையில், மறுவீட்டு அழைப்புக்காக நேற்று காலை ஷியாம் பிரசாத், மனைவி சுவாதி, ஷியாம் பிரசாத்தின் தந்தை சவுடையன் (62), தாய் மஞ்சுளா ஆகியோர் காரில் போடிக்கு புறப்பட்டனர். மற்றொரு காரில் உறவினர்கள் சென்று கொண்டிருந்தனர்.

ஷியாம் பிரசாத் சென்ற கார் சுந்தராபுரம் சிட்கோ மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரியும், காரும் மோதின. அக்கம் பக்கத்தினர் காருக்குள் சிக்கிக்கொண்ட 4 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சவுடையன், மஞ்சுளா, சுவாதி ஆகியோரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே மஞ்சுளா உயிரிழந்தார். மற்ற இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால், கோவை-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE