பள்ளி மாணவிகளுக்கு தொல்லை அளித்ததாக வழக்கு: ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னுக்குப்பின் முரணாக சாட்சியம் அளித்ததால் ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான செந்தில்குமார், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஏ.பள்ளிப்பட்டி போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் செந்தில்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நடந்தது. மனுதாரர் தரப்பில், கீழமை நீதிமன்றத்தில் தனக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் வாக்குமூலமும், புகார் அளித்த மாணவியின் தந்தை அளித்த வாக்குமூலமும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என்றும், தனக்கு எதிராக தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது.

போலீஸார் தரப்பில், அந்த ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக மாணவிகள் புகார் அளிக்க தயக்கம் காட்டியதால் தான் ஒரு மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார் என்றும், மாணவிகளின் வாக்குமூலங்கள் ஆசிரியருக்கு எதிராக தெளிவாக உள்ளது என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளி மாணவிகளுக்கு எதிரான இந்த பாலியல் குற்றங்களை தீவிரமாக கருத வேண்டும். இதில் முன்னுக்குப்பின் முரணாக சாட்சியங்கள் இருக்கக்கூடாது. இந்த வழக்கில் சாட்சியம் அளித்துள்ள மாணவி பாலியல் சீண்டல் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியங்கள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது, என உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE