தொன்மையான நடராஜர் சிலை உட்பட 7 சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்க முயற்சி: பாஜக நிர்வாகி, 2 காவலர்கள் கைது

By என்.சன்னாசி

ராமநாதபுரம்: தொன்மையான நடராஜர் சில உட்பட 7 சுவாமி சிலைகளை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற பாஜக நிர்வாகி, 2 காவலர்கள் உட்பட 4 பேரை சிலைக் கடத்தல் தடுப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் என்பவர் சட்டவிரோதமாக தொன்மை வாய்ந்த சுவாமி சிலைகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாக மதுரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சில தினத்திற்கு முன்பு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் தினகரன் மேற்பார்வையில், மதுரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி மலைச்சாமி தலைமையில் ஆய்வாளர் இளங்கோ, சத்தியபிரபா, கவிதா, பிரேமான சாந்தகுமார், செல்வராஜ், சந்தனக்குமார் அடங்கிய தனிப்படையினர் அலெக்ஸ் என்பவரை கண்காணித்து, அவரை கடந்த 2-ம் தேதி ராமநாதபுரத்தில் வைத்து பிடித்தனர். விசாரணையில், அவரிடம் மொத்தம் 7 சிலைகள் இருப்பது தெரியவந்தது. அச்சிலைகளை தன்னிடம் அருப்புக்கோட்டை காவலர் இளங்குமரன், விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி ஆகியோர் விற்க கொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

அவரது தகவலின் பேரில் காவலர் இளங்குமரன், கருப்புச்சாமியை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 4 ஆண்டுக்கு முன்பு, இளங்குமரன் திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த கணேசன், கருப்புசாமி ஆகிய 4 பேரும் சேலம் எடப்பாடி அருகிலுள்ள ஒரு மலை அடிவாரத்தின் அருகிலுள்ள கிராமத்திலுள்ள வீட்டில் மேற்படி சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக தகவல் அறிந்து, அங்கு சென்றதும், 4 பேரும் தங்களை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் என, கூறி சிலைகளை எடுத்து வந்ததும் தெரிந்தது. இச்சிலைகளை பாஜக நிர்வாகி அலெக்ஸ்சாண்டர் மூலம் சுமார் ரூ.5 கோடிக்கு விற்க முயன்றதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து உலோக சிலைகளான 2 அடி உயர நடராஜர், 1 1/4 அடி நடராஜர் சிலை, 1 1/2 நாககன்னி சிலை, ஒரு அடி உயர காளிசிலை, 3/4 உயர முருகன் சிலை, 1/2 உயர விநாயகர் சிலை, 1/2 நாகதேவதை சிலை களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இச்சிலைகள் ராமநாதபுரம் மாவட்டம், கூரி சாத்த அய்யனார் கோயிலின் பின்பகுதியிலுள்ள கால் வாயில் மறைத்து வைக்கப்பட்டது தெரிந்து, தனிப்படையினர் அச்சிலைகளை கைப்பற்றினர்.

இது தொடர்பாக அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய காவலர் இளங்குமரன் (44), விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டுவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கருப்புச்சாமி, (35), ராமநாதபுரம் மாவட்டம், தற்போது கள்ளக்குறிச்சியில் வசிக்கும் தேவசகாயம் மகன் அலெக்ஸ்சாண்டர் (52) ( பாஜக சிறுபான்மைப்பிரிவு ராமநாதபுரம் மாவட்ட செயலர்). திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் நாகநரேந்திரன், ராமநாதபுரம் ராஜேஷ், விருதுநகர் கணேசன் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. இவர்களில் ராஜேஷ், கணேசன் தவிர, பாஜக நிர்வாகி அலெக்ஸ்சாண்டர் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைப்பற்றிய சிலைகள் எந்த கோயிலைச் சேர்ந்தது என்பது குறித்தும், அவற்றின் தொன்மை பற்றியும் விசாரிக்கின்றனர். தலைமறைவான இருவரை தொடர்ந்து தேடுகின்றனர். தனிப்படையினரை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி பாராட்டினர். கைப்பற்றிய சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், ‘‘எடப்பாடி அருகிலுள்ள கிராமத்தில் ஒருவீட்டில் இருந்து சிலைகள் பறிக்கப்பட்டுள்ளன. இச்சிலைகள் அங்கு எப்படி வந்தது. ஏற்கனவே அச்சிலைகளை கடத்தி வைத்திருந்த கும்பலிடம் இருந்து பறித்தார்கள் என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம். மேலும், இச்சம்பவத்தில் சிக்கிய காவலர்களுக்கும், கருப்புசாமி உள்ளிட்டோருக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

6 days ago

மேலும்