நெல்லை: கணவரை கண்டுபிடிக்கக் கோரிய பெண் டாக்டருக்கு ரூ.25,000 அபராதம்

குடும்ப பிரச்சினையை மறைத்து கணவரை கண்டுபிடிக்கக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பெண் டாக்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த டாக்டர் ஹம்சத் தோனி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:

என் கணவர் கார்த்திக். எங்களுக்கு 25.8.2019-ல் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் உள்ளான். குடும்ப பிரச்சினை காரணமாக என் கணவரின் தந்தை ஆறுமுகம் பெருமாள்புரம் காவல் நிலையத்தில் 2021-ல் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு 18.5.2021 முதல் என் கணவரை காணவில்லை.

என் கணவரை அவர் தந்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே என் கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து அதிகாரிகளுக்கு அதிவிரைவு தபாலில் மனு அனுப்பிவிட்டு, தன் கணவரை மே மாதம் காணவில்லை என்று கூறி விடுமுறை கால நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் கணவர் மனுதாரரை பிரிந்து சென்னையில் நண்பருடன் வசித்து வருகிறார் என்றார்.

கார்த்திக் காணொலி காட்சி வழியாக நீதிபதிகள் முன்பு ஆஜரானார். அப்போது அவர் கூறுகையில், தன்னை யாரும் கடத்தவில்லை. தான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. மனுதாரர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எனக்கு மன ரீதியாக கொடுமை இழைத்தனர். விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் கட்டாயப்படுத்தி என்னை சேர்த்தனர். தற்போது சென்னையில் நண்பருடன் அமைதியாக வாழ்ந்து வருகிறேன் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் குடும்பப் பிரச்சினயை மறைத்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனால் நீதிமன்ற நடைமுறைகளை தவறாக பயன்படுத்தியதற்காக மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை மனுதாரர் உயர் நீதிமன்ற கிளை சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு வழங்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE