குடும்பத்தினரை வீட்டுக்குள் அடைத்து கத்தி முனையில் 53 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை: மேலூர் அருகே துணிகரம்

மேலூர் அருகே தம்பதி உள்ளிட்ட குடும்பத்தினரை வீட்டுக்குள் அடைத்து வைத்து கத்தி முனை யில் 53 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சத்தியபுரம் கிராமத்தில் வசிப்பவர் கோபி (28). வெளிநாடு சென்றிருந்த இவர் 6 மாதங்களுக்கு முன்பு தான் ஊர் திரும்பியிருந்தார். வீட்டில் தாய், மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென வீட்டுக்குள் புகுந்த சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க முகமுடி அணிந்த 4 பேர் முன்பகுதியிலுள்ள கிரில் கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கத்தி முனையில் அங்கிருந்தவர்களை அறை ஒன்றில் அடைத்தனர். கோபி, அவரது தாய் இந்திரா, மனைவி மற்றும் குழந்தை அணிந்திருந்த நகைகள் உள்ளிட்ட சுமார் 53 பவுன், ரூ. 1 லட்சம் ரொக்கத்தைக் கொள்ளை யடித்துத் தப்பினர். அறைக்குள் வைத்து பூட்டியதால் வெளியே வரமுடியாமல் தவித்த அவர்கள், நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறைப் பூட்டை உடைத்து மீட்கப்பட்டனர். தகவல் அறிந்த மேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் போலீஸார் விசா ரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் கொள்ளையர்களைத் தேடுகின்றனர். இக்கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE