ஆன்லைன் வர்த்தகம் மூலம் விவசாயியிடம் ரூ.4.38 லட்சம் மோசடி

ஆன்லைன் வர்த்தகம் மூலம் விவசாயியிடம் ரூ.4.38 லட்சம் மோசடி செய்தவர்களை தேனி சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.

தேனி அருகே பழனிசெட்டிபட்டி மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்த விவசாயி மோகன்சந்த் (55). இவர் ஆன்லைன் மூலம் வருமானம் ஈட்ட சமூகவலைதளம் ஒன்றை தொடர்பு கொண்டார். அப்போது பத்மபிரியா என்பவர், இவரைத் தொடர்பு கொண்டு ஒரு செயலியை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்ய கூறியுள்ளார். அதில் கூறியபடி ஆரம்பத்தில் சிறு பொருட்களை விற்பனை செய்தார். இதற்காக கமிஷன் தொகை வருவாயாக கிடைத்தது. இதை நம்பி பல தவணைகளில் அதிக அளவு பணத்தை முதலீடு செய்துள்ளார். ஆனால் அதன் பின் கமிஷன் தொகை வரவில்லை.

இதுகுறித்து கேட்டபோது, நிர்ணயிக்கப்பட்ட நாட்களுக்குள் நீங்கள் பொருட்களை விற்கவில்லை, பணத்தை அனுப்புவதில் சர்வர் பிரச்சினை உள்ளது என பல்வேறு காரணங்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பொருட்களை விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதை நம்பி அடுத்தடுத்து பொருட்களை விற்பனை செய்துள்ளார்.

இருப்பினும் மோகன்சந்த்துக்கு தர வேண்டிய ரூ.4,38,051-ஐ பல மாதங்களாக தராமல் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீஸாரிடம் மோகன்சந்த் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அரங்கநாயகி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE