பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்கப்பட்டனர்.

கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள, கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் சங்குபதி (50). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன் மனைவி கவிதா (30). இவரது மகள் சாதனா (11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சங்குபதி, கவிதா, சாதனா ஆகியோர் இன்று (ஆக.19) மதியம் 4 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து பத்ரகாளியம்மன் கோயில் வழித்தடத்தில் உள்ள, மீன்பண்ணை பகுதிக்குத் துணி துவைக்கச் சென்றனர். அங்குள்ள பவானி ஆற்றின் கரையில் சங்குபதி, கவிதா துணி துவைத்துக் கொண்டிருந்தனர். சாதனா அருகே நின்று தண்ணீரில் நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது.

வெள்ளப் பெருக்கு

ஆனால், சமயபுரம் பகுதியில் உள்ள கதவணை மின் நிலையத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சங்குபதி, கவிதா, சாதனா ஆகிய மூவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த சிலர், சாதனாவை மீட்டுக் காப்பாற்றினர். சங்குபதி, கவிதா ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் மேட்டுப்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடினர். அடித்துச் செல்லப்பட்ட பகுதியில் சிறிது தூரம் தள்ளி உள்ள சாமண்ணா வாட்டர் டேங்க் அருகேயுள்ள பவானி ஆற்றில் சங்குபதி, கவிதா ஆகியோரைச் சடலமாகச் சிறிது நேரத்தில் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மீட்கப்பட்டவர்களின் சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE