யூடியூபர்கள் ஜி.பி.முத்து, பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையில் புகார்

By செய்திப்பிரிவு

பிரபல யூடியூபர்கள் ஜி.பி.முத்து, பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது ஆபாசமாக பேசுவதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் முஹைதீன் இப்ராகிம் என்பவர் புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகார் மனுவின் விவரம் வருமாறு,

"சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசும் காணொலிப் பதிவுகள் அதிகளவில் வலம்வருகின்றன. தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காத காரணத்தால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை பயன்படுத்தி யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஜி.பி. முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தர் போன்ற பலர் ஆபாசமாக பல்வேறு காணொலிகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதனை லட்சக்கணக்கானோர் கண்டு பகிர்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும், பேச்சுக்களும் தமிழ்நாட்டில் கலாசாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

குறிப்பாக சிறுவர், சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் வகையில் ஆபாச பதிவுகள் இந்த காணொலிகளில் இடம்பெறுகின்றன.இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் நஞ்சைப் பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இது போன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE