கடந்த வாரம் முழுவதும் தலைப்புச் செய்தியாக இருந்த பப்ஜி மதன், போலீஸுக்குப் போக்கு காட்டி வந்த நிலையில், போலீஸாரிடம் புது டெக்னிக் காட்டிய மதனை பழைய டெக்னிக்கைப் பயன்படுத்தி போலீஸார் பிடித்த சுவாரஸ்யப் பின்னணி தெரியவந்துள்ளது. தொடர்ந்து புகார்கள் குவிவதாலும், பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகாரளிக்கவும் மின்னஞ்சல் முகவரியை காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டைப் பலருக்கும் சொல்லித் தருகிறேன் என யூடியூப் சேனல் ஆரம்பித்தவர் மதன். இவரிடம் 8 லட்சம் பேர் வரை சந்தாதாரர்களாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் 2 கே கிட்ஸ் என அழைக்கப்படும் 2000ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்களே. குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் 15 வயதுள்ள சிறுவர், சிறுமியரே என போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
சமீபகாலமாக கரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் கருவியைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவர்களும், வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகளுமே சந்தாதாரர்களில் பெரும்பாலானவர்கள். சமூக அக்கறை குறித்த சிந்தனை வளராத நிலையில் பால்ய பருவம், வாலிபப் பருவம் இடையே குழப்ப மனநிலையிலும், ஆர்வ மனநிலையிலும் உள்ள இத்தகைய இளம் பருவத்தினரே மதனின் குறிக்கோள்.
» யூடியூபர் மதன் நீதிமன்றத்தில் ஆஜர்: ஜூலை 3 வரை சிறையிலடைப்பு
» தலைமறைவாக உள்ள சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியை முன்ஜாமீன் கோரி மனு
அதற்கு ஏற்றாற்போல் ஏழை கூலிக் தொழிலாளி முதல் வசதி படைத்தவர்கள் வரை தங்கள் குழந்தைகள் பள்ளியில் பயில வாங்கிக்கொடுத்த செல்போனும், அளவில்லா ஜிபி டேட்டாக்களும், பெற்றோர் கவனிப்பின்மையும் மதன் போன்றோர் பணம் சம்பாதிக்க வாய்ப்பாக அமைந்தது. இப்பருவத்தினரை எப்படியும் வளைக்கலாம். அதிலும் பப்ஜி கேம் போன்றவை வன்முறையைத் தூண்டுபவை ஆகும்.
இதை விளையாட ஒருவர் சொல்லித்தருகிறார் என்றால் ஆர்வமுடன் அந்த யூடியூப் சேனலைப் பார்க்கத் தொடங்கினர், சந்தாதாரர்களாயினர். ஒருவர் சேரும்போது அவரது பள்ளி, கல்லூரி நண்பர்களைத் தானாகச் சேர்ப்பது என்ற வாய்ப்பும் மதனின் வருமானத்தைப் பெருக்கியது. அதனால் பணம் கொழித்தது. கூடவே மதனின் சேஷ்டைகளும் அதிகரித்தன. ஆரம்பத்தில் ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க 5 லட்ச ரூபாய் கடன் பெற்று அதில் நஷ்டம் ஏற்படவே தலைமறைவான மதன், யூடியூப் மூலம் பெற்ற வருமானத்தில் பங்களா, சொகுசு கார்கள், வங்கியில் கணிசமான பணம் எனும் அளவுக்கு வளர்ந்தார்.
வலைதளங்கள் குறித்த பெற்றோர்களின் அறியாமை, பிள்ளைகள் படிக்கிறார்கள் எனப் பெற்றோரின் நம்பிக்கையை மடைமாற்றி தனது பணம் சம்பாதிக்கும் முயற்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார் மதன். இதன் மூலம் இளம் தலைமுறையினரை வன்முறை எண்ணம் கொண்டோராகவும், சமூக அக்கறை எதுவும் இல்லாதவர்களாகவும் மாற்றுகிறோம், கல்வியில் ஈடுபடாமல் கவனம் சிதறி அவர்களின் எதிர்காலமே பாதிக்கும் என்பது பற்றியெல்லாம் மதனுக்குக் கவலையில்லை.
ஜாடிக்கு ஏற்ற மூடியாக மதனின் மனைவி கிருத்திகா அமைந்தார். போலீஸ் விசாரணையில் மதனுக்கு இத்தகைய ஆலோசனைகளை வழங்கி அனைத்துச் செயல்களுக்கும் மூளையாக விளங்கியதே அவரது மனைவிதான் எனத் தெரியவந்துள்ளது. தனது சந்தாதாரர்களுக்கு பப்ஜி கேம் விளையாடச் சொல்லித் தருகிறேன் என அவர்களையே கேரக்டர்களாக மாற்றி அவர்களைக் கேவலமாகப் பேசுவது, தன்னுடன் ஒரு பெண் கேரக்டரை வைத்துக்கொண்டு இருவரும் ஆபாசமாகப் பேசுவது என தன் இஷ்டத்துக்குப் பணம் பண்ணுவதற்காகச் செயல்பட்டுள்ளார் மதன்.
வளர்கிற பருவத்தில் இளம் பருவத்தினர் தவறாக வழிநடத்தப்பட்டால் அது அவர்கள் குடும்பம் தாண்டி சமுதாயத்தையும் பாதிக்கும். அதிலும் பப்ஜி கேம் போன்றவை முதலில் வன்முறை எண்ணம் கொண்டவர்களாக அவர்களை மாற்றும். இதன் மூலம் சகிப்புத்தன்மையின்மையும், மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதே கூடாது என்கிற எண்ணமும் வளரும்.
மற்றவர்கள் துன்பங்களைக் கண்டு மகிழும் எண்ணம் வளரும். இதனால் வன்முறை எண்ணம் கொண்ட இளம் தலைமுறையினர் வளரவே வாய்ப்புள்ளது என்பதால் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டது. ஆனால், அதைக் குறுக்கு வழியில் தனது பணம் சம்பாதிக்கும் ஆசைக்குப் பய்ன்படுத்திக் கொண்டனர் மதன் தம்பதியர். இதை எதேச்சையாகக் கண்ட சமூக ஆர்வலர்கள், நல்லுள்ளம் கொண்டோர் இதைக் கண்டித்தபோது ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மதன் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார்.
பப்ஜி கேமில் புலியான மதன், பப்ஜி விளையாட்டு போலவே சட்டத்தின் இடுக்குகளில் புகுந்து தப்பிக்கலாம், சட்டம் தன்னை ஒன்றும் செய்யாது என நம்பியதுதான் வேடிக்கை. தனது சந்தாதாரர்களையும் தனக்கு ஆதரவாக இதுகுறித்துக் கேட்டவர்களை மிரட்ட வைத்தார். தன்னை எதுவும் செய்ய முடியாது மேலும் இதுபோன்ற வீடியோக்களைப் போடுவேன் என மிரட்டலாகவும் அலட்சியமாகவும் பதிலளித்தார்.
இவரது வீடியோவில் ஆபாசமாகப் பேசுவதை சந்தாதாரரான பெண் ஒருவர் குறைத்துக்கொள்ளக் கேட்டபோது அவரது ஏழு தலைமுறை சந்ததியினரையும் இழுத்துத் திட்டியும், பெண் சொன்னால் நான் கேட்கணுமா ப்ரோ என்றும், மேலும் காது கூசும் அளவுக்கும் மதன் அதில் பேசியுள்ளார்.
அதேபோன்று அவரை விமர்சித்தவர்களை நாகூசும் வார்த்தைகளால் விமர்சிக்கும் அவர், மதன் என்ன லாலிபாப் சாப்பிடும் பச்சை குழந்தைன்னு நினைச்சுக்கிட்டீங்களா? சைபர் கிரைம் போலீஸ் என்ன செய்துடுவாங்க என்று கூறி மிகவும் அவதூறாகப் பேசி மிரட்டியுள்ளார்.
இன்னொரு நபரை இப்படியெல்லாம் கேட்டேன்னு வச்சிக்க, முதலில் உங்கப்பா இருக்க மாட்டார், அப்புறம் அம்மா இருக்க மாட்டாங்க, அப்புறம் உனக்கு நெருக்கமானவர்கள் இருக்க மாட்டார்கள், என்ன காரணம் என்று தெரியும் முன் நீயே உயிருடன் இருக்க மாட்டாய் என மிரட்டியுள்ளார்.
14 வயதுப் பெண்ணுடன் டேட்டிங் போனதை அப்பட்டமாகப் பேசியுள்ளார். 18 பிளஸ் எனப் போட்டுக்கொண்டு சிறுவர்-சிறுமிகளைச் சேர்த்து ஆபாசமாகப் பேசி அவர்களை மூளைச்சலவை செய்து பணம் பறிக்கும் வீடியோக்களும் உள்ளன. ஒரு சிறுவன் ஒரு கேமில் ஈர்க்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாயை உடனே கட்டுகிறான். அவனிடம் பேசும் மதன், என்ன செய்கிறாய் எனக் கேட்க, 10ஆம் வகுப்பு படிக்கிறேன் என அச்சிறுவன் சொல்ல, எப்படிடா இந்த வயசிலே இப்படி சூப்பர்றா எனப் பாராட்டியுள்ளார்.
ஒரு காட்சியில் தனக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளிக்காத மதனால் மனம் உடைந்த சிறுவன் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு மகிழ்ந்தார். எங்கோ ஒரு இடத்தில் கையை அறுத்துக்கொண்டு மகன் உயிருக்குப் போராட என்ன காரணம் என்றே தெரியாத அப்பாவி பெற்றோர் எல்லாம் மதன் பார்வையில் வாழத் தகுதியற்றவர்கள்.
மதனின் கொடூரக் குற்றங்களைத் தட்டிக் கேட்பவர்களை ஆபாச அர்ச்சனை செய்து கூனிக்குறுக வைத்து வெளியேற்றுவதும், மீறி யாராவது பதிவிட்டால் தன்னைப் பின்பற்றும் சிறுவர்களை வைத்து அன்-லைக் அதிக அளவில் போட வைத்து அதை ஸ்பாம் நியூஸாக மாற்றும் கலையையும் செய்து வந்துள்ளார். மதன் குறித்துச் சிறிய அளவில் பதிவு செய்த பிரபல தொலைக்காட்சியின் பக்கத்தில் உள்ள செய்தியை அதிக அளவில் அன்-லைக் செய்ய வைத்து ஸ்பேம் நியூஸ் ஆக்கியது கைதுக்கு முன் மதனின் நடவடிக்கையில் ஒன்று.
இதனால் இனி இவரிடம் பேசிப் பயனில்லை எனச் சட்டத்தின் கதவுகளைத் தட்டினர் சமூக ஆர்வலர்கள். மதனைக் கைது செய் என்கிற ஹேஷ்டேக் பிரபலமானது. ஐபிஎஸ் அதிகாரிகள் கவனத்திற்கு உரியவர்கள் கொண்டுசென்றனர். ஊடக வெளிச்சத்திற்கும் மதன் வந்தார். அனைத்துப் பக்கங்களிலிருந்தும் மதன் குறித்த புகார்கள் குவியத் தொடங்கியதும் போலீஸ் சாதாரண வழக்கு என எண்ணி மதனுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரச்சொன்னது.
அப்போதுதான் சட்ட நடவடிக்கை குறித்து மதனுக்கு யதார்த்த வாழ்வில் பயம் வந்தது. சம்மன் கொடுத்து அழைத்த புளியந்தோப்பு போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து பப்ஜி கேமில் ஆபாசமாகத் திட்டிக்கொண்டே சுட்டுத் தள்ளுவதுபோல் நடக்க முடியாது என்கிற யதார்த்தம் புரியத் தொடங்கியது. ஆனாலும், அவர் விசாரணையில் ஆஜராகியிருந்தாலோ, வழக்கறிஞர் மூலம் ஆஜராகியிருந்தாலோ விசாரணை என்கிற அளவிலேயே பிரச்சினை முடிந்திருக்கும்.
ஆனால், சட்ட நடவடிக்கை பற்றி அறியாத யூடியூப் புலி மதன் தப்பி, தலைமறைவானார். சைபர் கிரைம் போலீஸை என் பணத்தாலும், வக்கீலாலும் ஒரு வழிபண்ணிவிடுவேன் என்று பேசியவர் தலைமறைவானார். இதனால் போலீஸுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. போலீஸார் மதனின் செல்போன் எண்ணை டிராக் செய்தபோது நவீன தொழில்நுட்பம் மூலம் அவர்களைக் கண்காணிக்க முடியாத அளவுக்குச் செய்தார்.
இதனால் போலீஸார் மதன் மீது ஐபிசி 509- பெண்களை ஆபாசமாகச் சித்தரித்து பேசுதல், 294 B- அவதூறாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளான தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர். முதலில் மதனின் தந்தை, மனைவி இருவரையும் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். இதில் மதனின் மனைவி கிருத்திகா சொன்ன பல விஷயங்கள் போலீஸாருக்குக் கூடுதல் தகவல்களை அளித்தன.
மதனின் மனைவியே அனைத்துக்கும் மூளையாகச் செயல்பட்டதும், மதனின் அனைத்துக் குற்றச்செயல்களுக்கும் உடந்தையாக இருந்ததும், யூடியூப் அவர் பெயரில் இயங்கி வருவதும் தெரியவந்ததை அடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரைச் சிறையில் அடைத்தனர். பின்னர் மதனைப் பிடிக்க போலீஸார் வேறு மாதிரி வலை விரித்தனர். மதனின் உறவினர்கள் யார் யார் எனத் தந்தையிடம் விசாரித்தனர்.
இதில் மதன் நெருக்கமாகப் பழகும் உறவினர்கள், நண்பர்களின் பட்டியலை எடுத்தனர். தன்னுடைய செல்போன் எண்ணைத்தானே ட்ரேஸ் செய்வார்கள் எனத் தெம்பாக நவீன தொழில்நுட்பம் மூலம் பந்தாவாக தருமபுரியில் உள்ள பார்த்திபன் என்கிற உறவினர் வீட்டுக்குச் சென்ற மதன் அங்கு பதுங்கினார். அவரைத் தனது வீட்டின் அருகில் ஒரு ஓட்டு வீட்டில் தங்கவைத்தார் பார்த்திபன்.
மதனின் தந்தையிடம் அவரது உறவினர்கள் பெயரைச் சேகரித்த போலீஸாரின் பட்டியலில் பார்த்திபனும் ஒருவர். அவரது செல்போன் எண்ணை வாங்கிய போலீஸார் அவரது எண்ணின் டவரைச் சோதித்தபோது அது தருமபுரியில் ஒரு தங்கும் விடுதியைக் காட்டியது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், அந்த விடுதிக்குச் சென்றனர். அங்கிருந்த பார்த்திபனைப் பிடித்து விசாரித்தபோது அதிர்ச்சி அடைந்த பார்த்திபன், போலீஸார் தன்னைப் பிடித்துவிடாமல் இருக்கவே தங்கும் விடுதியில் இருப்பதாகத் தெரிவித்தார்.
மதன் எங்கே என்றபோது ஊருக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள் தங்க வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவரை அழைத்துக்கொண்டு அங்கு சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. லுங்கி கட்டிக்கொண்டு கிராமத்து ஆள் போல் ஒரு நபர் இருந்தார். போலீஸார் இவரா மதன் என்று கேட்க, ஆமாம் சார் என்று கூறியுள்ளார் பார்த்திபன். படத்தில், யூடியூபில் சினிமா ஹீரோ போல் பில்டப் செய்து படத்தைப் போட்டிருந்த மதன் அங்கு வேறுமாதிரி இருந்தார்.
அவர் கைது செய்யப்பட்ட அறையில் 3 லேப்டாப், 2 ஐபோன்கள், ஹார்ட் டிஸ்க்குகளை போலீஸார் கைப்பற்றினர். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். அங்கு மதனை எவ்வாறெல்லாம் யூடியூபில் பப்ஜி கேம் விளையாடுவார் என நடித்துக்காட்டச் சொல்லி வீடியோவில் பதிவு செய்தனர்.
சாதாரணமாகப் பேசி பப்ஜி கேம் விளையாடிய மதனிடம், சந்தானத்திடம் டிராபிக் கான்ஸ்டபிள் கேட்பதுபோல் அந்த வார்த்தையையும் அவ்வப்போது சேர்த்துச் சொல்லு என அவதூறான வார்த்தைகளையும் பேசி லைவ்வாகப் பதிவு செய்தனர். இந்தப் பதிவுகளும், யூடியூபில் மதன் பேசிய பதிவுகளும் தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டு ஒப்பிடப்பட்டு ஆதாரமாக இணைக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
பின்னர் மதனைக் கைது செய்த போலீஸார், சென்னைக்கு அழைத்து வந்தனர். இங்கும் மதனை எதிர்பார்த்துக் காத்திருந்த செய்தியாளர்கள் போலீஸார் அழைத்து வரும் நபரைப் பார்த்து யார் இவர் எனக் கேட்டுள்ளனர். இவர்தாங்க மதன் என்று கூறியதைப் பார்த்து ஆன்லைனில் ஐபோனுக்கு ஆர்டர் கொடுத்து ஆண்ட்ராய்டு போனை பார்சலில் வாங்கிய வாடிக்கையாளர் போல் அனைவரும் விழித்துள்ளனர்.
பப்ஜி கேம் விளையாடித் தன்னை ஒரு ஹீரோவாகப் படங்களை அழகுபடுத்தி பில்டப் செய்த மதன், யதார்த்தம் என்ன என்பதை போலீஸாரிடம் சிக்கிய பின்னர் உணர்ந்தார். ஆனால், அவரது ரசிகப் பட்டாளமான 2 கே கிட்ஸ்கள் என அழைக்கப்படும் பதின்ம பருவத்தினர், மதன் எப்படி வேறு ஒரு நபரை மாட்டிவிட்டுதான் தப்பித்துவிட்டார் பார்த்தீர்களா? போலீஸாரின் புத்திசாலித்தனம் எங்கள் மதன் சாதாரணமாகச் சிந்திக்கும் மனம் எனப் பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சில ஆதரவாளர்கள், “மதனிசம் என்றால் என்னன்னு இப்ப காட்டுகிறோம் பிரண்ட்ஸ். எல்லோரும் உங்கள் ஊரில் உள்ள ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் போய் அவருக்கு சப்போர்ட் பண்ணி ஒரு மனு போடுங்க” எனப் பதிவிடுகின்றனர். இப்போதும் மதனை ஹீரோவாகக் கருதிக்கொண்டு ட்விட்டர், இன்ஸ்டா மற்றும் செய்தி போடும் ஊடகங்களின் பக்கத்தில் சென்று உரண்டை இழுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ள போலீஸார், மதனால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியையும் அளித்துள்ளனர். வரும் ஜூன் 21 அன்று மதன் அவரது மனைவி இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அதில் மேலும் பல உண்மைகள் வெளியாகும். கைதான மதனுக்கு ரூ.4 கோடி பணம் வங்கியில் உள்ளதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்றெல்லாம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வருகின்றன.
மேலும், மதனிடம் கைப்பற்றிய லேப்டாப்பில் அவரது சட்டவிரோதச் செயல்பாடுகள், குழந்தைகளின் ஆபாசப் படக் காட்சிகள், ஸ்க்ரிப்டோ கரன்ஸி தொழிலில் அவரது ஈடுபாடு, போலி சிம் கார்டுகள் பயன்படுத்தியது, நிழல் உலகில் அவரது செயல்பாடுகள், சிறுமிகள் வீடியோ எதையும் விற்றுள்ளாரா, அவருடன் தொடர்பில் உள்ள மற்ற பிரபலமான 2 யூடியூபர்களுக்கும் மதனுக்கும் உள்ள தொடர்பு, அவருடன் தொழிற்கூட்டணியில் உள்ளவர்கள், அவரது பண வரவுகள், வரி ஏய்ப்பு இருப்பின் அது குறித்து தகவல் சேகரிக்க உள்ளனர்.
பப்ஜி கேம் விளையாடி வாயாலேயே வடை சுட்டு ஹீரோயிசம் காட்டிய மதன், அதே ஹீரோயிசத்தை இது தவறு என்பவர்களிடம் ஓவராகக் காட்டி சிக்கி சிறையில் கம்பி எண்ணுகிறார். மதனின் பப்ஜி கேம் மட்டுமல்ல தோண்டத் தோண்ட இன்னும் பல மர்மங்கள் வெளிப்படலாம்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
7 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago