ஆம்பூர் அருகே சிக்னல் கோளாறைச் சரிசெய்யச் சென்ற ரயில்வே ஊழியர்கள் 2 பேர் சரக்கு ரயில் மோதி பலி

By ந.சரவணன்

ஆம்பூர் அருகே ரயில்வே சிக்னலைச் சரி செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ரயில்வே ஊழியர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்துக் காவல் துறையினர் கூறியதாவது:

''திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை மொழலை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் முருகேசன் (45). ஆம்பூர் ரயில் நிலையத்தில் சிக்னல் பிரிவில் முதுநிலை பொறியாளராகப் பணியாற்றி வந்தார். அதேபோல, பிஹார் மாநிலம் கையகுருவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரவேஷ்குமார் (25). இவர் சிக்னல் பிரிவில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதில், ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் - கோவிந்தாபுரம் இடையேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் சிக்னலில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

இதனால், ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என்பதை அறிந்த முதுநிலை பொறியாளர் முருகேசன் பழுதான சிக்னலைச் சரி செய்ய பரவேஷ்குமாருடன் நள்ளிரவு 12.30 மணிக்குக் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி சென்றார். அங்கு சிக்னலைச் சரி செய்த பிறகு இரவு 1.15 மணிக்கு ஆம்பூர் ரயில் நிலையம் நோக்கித் தண்டவாளத்தில் மழையில் நனைந்தபடி இருவரும் ஒன்றாகத் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

பச்சகுப்பம் - கோவிந்தாபுரம் ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் ரயில்வே தண்டவாளம் ‘ப’ வடிவில் வளைவு திரும்பும் இடத்தில் இருவரும் நடந்து சென்றபோது பின்பக்கமாக ஜோலார்பேட்டையில் இருந்து ரேணிகுண்டா நோக்கிச்சென்ற சரக்கு ரயில் இருவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி, பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிக்னலைச் சரிசெய்யச் சென்ற 2 ஊழியர்களும் ரயில் நிலையத்துக்குத் திரும்பாததால் சந்தேகமடைந்த ரயில்வே ஊழியர்கள் சென்று பார்த்தபோது முருகேசன் மற்றும் பரவேஷ்குமார் ஆகியோர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், ரயில்வே காவல் ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டனர். உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்''.

இவ்வாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரயிலில் அடிபட்டு உயிரிழந்த முருகேசனுக்கு சசிகலா (40) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பரவேஷ்குமாருக்குத் திருமணமாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE