சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணையை 8 வாரத்திற்குள் முடிப்போம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி உறுதி அளித்துள்ளது. டிஜிபியை சஸ்பெண்ட் செய்த அரசின் நடவடிக்கைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எஸ்.பி. ஒருவர் காவல்துறை தலைவர் திரிபாதி, தலைமைச் செயலர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் வெளியே கசிந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட சிறப்பு டிஜிபியைப் பணியிடை நீக்கம் செய்து குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் திமுக பெரும் போராட்டம் நடத்தும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புகார் அளிக்க வந்தபோது செங்கல்பட்டு எஸ்.பி. தலைமையிலான போலீஸார் பெண் எஸ்.பி.யைத் தடுத்து நிறுத்தி மிரட்டியதாகப் புகார் வெளியானது. இதையடுத்து, சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீஸாருக்கு வழக்கு மாற்றப்பட்டு பெண் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கைத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷே தொடர்ந்து விசாரிக்கலாம் எனத் தலைமை நீதிபதி அமர்வு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் கடந்த 12-ம் தேதி அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியைத் தடுத்தார் என செங்கல்பட்டு எஸ்.பி.யை மட்டும் சஸ்பெண்ட் செய்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16-ல் தாக்கல் செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை உயர் நீதிமன்றம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் எனவும் எச்சரித்து ஒத்திவைத்தார்.
இதையடுத்து அதுவரை விசாரணைக்கு அழைக்கப்படாத டிஜிபியை சிபிசிஐடி போலீஸார் எழும்பூர் தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்தனர். அவரிடம் 5 மணி நேரம் டிஜிபி பிரதீப் வி.பிலிப், விசாரணை அதிகாரி முத்தரசி எஸ்.பி. ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 16-ம் தேதி மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட டிஜிபி, எஸ்.பி. உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணை உள்ளிட்ட முழு விசாரணையின் முதற்கட்ட அறிக்கை சீலிட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால், புகாரில் சிக்கிய முக்கியக் குற்றவாளியான டிஜிபியை சஸ்பெண்ட் செய்யாதது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் மார்ச் 18-ம் தேதி இரவு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கான அறிவிப்பும் அந்த டிஜிபியிடம் அளிக்கப்பட்டது.
தமிழக காவல்துறை வரலாற்றில் டிஜிபி அந்தஸ்து அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், அதுவும் பாலியல் புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் இதுவே முதல் முறை ஆகும்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான டிஜிபியை சஸ்பெண்ட் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த அரசுக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். மேலும், விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? எனக் கேள்வி எழுப்பினார்.
சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுவரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். டிஜிபியின் மொபைல் போன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆய்வு அறிக்கைக்குக் காத்திருப்பதாகவும் விளக்கமளித்தார். மேலும், 8 வாரத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 13ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார். அன்றைய தினம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
12 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago