கோவை அருகே மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் கைது

கோவை அருகே அன்னூரில், மின் இணைப்புக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய அதிகாரிகள் 2 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று (18-ம் தேதி) கைது செய்தனர்.

கோவை அன்னூர் அருகேயுள்ள, வடக்கலூரைச் சேர்ந்தவர் கனகராஜ் (42), விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாகத் தோட்டம் உள்ளது. தோட்டப் பணிக்கு மின் இணைப்பு பெறுவதற்காக சில தினங்களுக்கு முன்னர், அன்னூர் பிரதான துணை மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, வடக்கலூர் மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். மின் இணைப்புப் பணிகளுக்கான கட்டணமாக ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் தொகையையும் கனகராஜ் கட்டியுள்ளார்.

அதைத் தொடர்ந்து மின் இணைப்புக்கான பணியை வழங்க வேண்டிய, அன்னூர் பிரதான துணை மின்சார வாரிய உதவிப் பொறியாளர் ராஜேந்திரன் (57), பணி ஆணையை வழங்கவில்லை. அது தொடர்பாக கனகராஜ் அவரிடம் விசாரித்தபோது, ரூ.15 ஆயிரம் தொகையை லஞ்சமாகத் தருமாறு அவர் கேட்டுள்ளார். இதற்கு வடக்கலூர் மின்சார வாரியத்தின் லைன் இன்ஸ்பெக்டர் இளங்கோ என்ற வெங்கடாச்சலம் (51) என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத கனகராஜ், மேற்கண்ட சம்பவம் தொடர்பாகக் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், கனகராஜிடம் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரம் தொகையைக் கொடுத்துள்ளனர். ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள தாள்களை எடுத்துக்கொண்டு, வடக்கலூர் மின்சார வாரிய அலுவலகத்துக்கு கனகராஜ் இன்று (18-ம் தேதி) சென்றார். அங்கிருந்த உதவிப் பொறியாளர் ராஜேந்திரன், லைன் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் ஆகியோரிடம் கொடுத்தார். அவர்கள் ரூ.15 ஆயிரம் தொகையை வாங்கி வைத்தனர்.

இதை மறைந்திருந்து கண்காணித்த டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், உதவிப் பொறியாளர் ராஜேந்திரன், லைன் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில் லஞ்சத் தொகையைக் கேட்டதை, இருவரும் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து அவர்களது அலுவலகம் மற்றும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE