சென்னை, அம்பத்தூரில் புகாரை விசாரிக்க 15 ஆயிரம் லஞ்சம் கேட்ட அம்பத்தூர் காவல் உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் மேன்பவர் ஏஜென்சி ஒன்றைச் சொந்தமாக நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திலிருந்து சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்குச் சில மாதங்களுக்கு முன் 24 ஊழியர்களை அனுப்பியிருந்தார்.
அங்கு பணிக்குச் சென்ற 24 ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய ஒரு வாய்ப்பு இருப்பதாக விமான நிலையத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றும் பெண் ஒருவர் ஆனந்தராஜிடம் தெரிவித்ததன் பேரில் ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 24 பேருக்கு ரூ.12 லட்சத்தை அப்பெண் அதிகாரியிடம் ஆனந்தராஜ் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்ற அந்தப் பெண் அதிகாரி 24 ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதனால் பணத்தைக் கொடுத்த ஊழியர்கள் ஆனந்தராஜை நெருக்கவே அவர் பலமுறை அந்தப் பெண் அதிகாரியைக் கேட்டும் அவர் பணம் தராமல் ஏமாற்றியுள்ளார். வேறு வழியில்லாமல் காவல் ஆணையரிடம் விமான நிலையப் பெண் அதிகாரியிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டதை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் ஆனந்தராஜ் புகாராகப் பதிவு செய்திருந்தார்.
» திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கும் உரிமை கோருகிறார் பழனிசாமி: ஸ்டாலின் சாடல்
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து அம்பத்தூர் குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டது. வழக்கு அம்பத்தூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் தமீம் வசம் ஒப்படைக்கப்பட்டு, விசாரிக்க அறிவுறுத்தப்பட்டது.
புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டுமானால் முதலில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என ஆனந்தராஜிடம், உதவி ஆய்வாளர் தமீம் கேட்டுள்ளார். எப்படியாவது 12 லட்சம் ரூபாய் கிடைத்தால் போதும் என நினைத்த ஆனந்தராஜ், சில நாட்களுக்கு முன் முதல் தவணையாக காவல் உதவி ஆய்வாளர் தமீமிடம் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மீதிப் பணம் 15 ஆயிரம் ரூபாயைக் கேட்டு உதவி ஆய்வாளர் தமீம், ஆனந்தராஜை அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்தராஜ், நடவடிக்கை எடுக்காமல் லஞ்சப் பணம் கேட்டுத் தொந்தரவு செய்யும் உதவி ஆய்வாளர் தமீம் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் தமீம் லஞ்சம் கேட்டது உறுதியானது. இதையடுத்து உதவி ஆய்வாளர் தமீமைக் கையும் களவுமாகப் பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டம் வகுத்தனர்.
ஒரு குறிப்பிட்ட நாள், நேரத்தைச் சொல்லி மீதிப் பணம் 15,000 ரூபாயைத் தருவதாக ஆனந்தராஜை உதவி ஆய்வாளர் தமீமிடம் சொல்லச் சொன்னார்கள். அதன்படி ஆனந்தராஜ் சொல்ல தமீமும் வரச்சொல்லிக் காத்திருந்துள்ளார். ஆனந்தராஜிடம் ரசாயனம் தடவிய 15 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்தனுப்பி ஸ்டேஷன் அருகே தயாராக இருந்துள்ளனர்.
திட்டமிட்டப்படி ஆனந்தராஜ் ரூ.15000-ஐ உதவி ஆய்வாளர் தமீமைச் சந்தித்துக் கொடுத்துள்ளார். தமீம் பணத்தை வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், திடீரென ஸ்டேஷனுக்குள் புகுந்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து ரசாயனம் தடவிய நோட்டைக் கைப்பற்றினர். கையும் களவுமாகச் சிக்கிய தமீம் கடந்த 4-ம் தேதிதான் கொடுங்கையூர் குற்றப்பிரிவில் இருந்து அம்பத்தூர் குற்றப்பிரிவுக்கு மாறுதலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 hour ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago