போன இடம் தெரியாத போதைப்பொருள் பொட்டலங்கள்: இரு உதவி ஆய்வாளர்கள் உள்பட மூவர் இடைநீக்கம்

By கரு.முத்து

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விலை மதிப்புமிக்க நான்கு போதைப்பொருள் பொட்டலங்கள் மாயமான சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பரங்கிப்பேட்டை காவல் சரகத்துக்கு உட்பட்ட சி.புதுப்பேட்டை என்ற மீனவ கிராமத்தில் கடந்த மார்ச் 14-ம் தேதி நடந்தது இந்தச் சம்பவம். அன்று அதிகாலையில் கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள் இருவர் அங்கு கரையொதுங்கிக் கிடந்த வித்தியாசமான பொட்டலங்கள் சிலவற்றைப் பார்த்தனர். அவை தண்ணீர் புகாதவாறு நன்கு பாதுகாப்பாக, பிளாஸ்டிக் உறைகள் கொண்டு கட்டப்பட்டிருந்தன. மொத்தம் எட்டுப் பொட்டலங்கள் கிடந்தன. பொட்டலங்கள் சற்றே வித்தியாசமாகத் தெரிந்ததால் உடனே ஊர்ப் பஞ்சாயத்துப் பிரமுகர்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து ஊர் நிர்வாகத்தினர் அந்தப் பொட்டலங்கள் குறித்து பரங்கிப்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸ் வந்து பொட்டலங்களைப் பிரித்துப் பார்த்த போதும் அவர்களாலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இதனால் அந்தப் பொட்டலங்களைக் காவல் நிலையத்தில் பின்புறம் இருக்கும் ஓர் அறையில் போட்டு வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதோடு ஊர் மக்களும், போலீஸாரும் அந்த விஷயத்தை மறந்தே போய்விட்டனர். பரங்கிப்பேட்டை போலீஸார் இதுகுறித்து தங்கள் உயர் அதிகாரிகளுக்கும் எந்தத் தகவலும் அளிக்கவில்லை. இதுகுறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் அருகே விலை உயர்ந்த போதைப்பொருள் பொட்டலங்கள் கரை ஒதுங்கியதை அடுத்து கடலோர மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன.

அப்போதுதான் சி.புதுப்பேட்டையிலும் இதேபோன்ற பொட்டலங்கள் கரை ஒதுங்கியது போலீஸாருக்கு நினைவுக்கு வந்திருக்கிறது. மாமல்லபுரம் அருகே கிடைத்த அதேவகைப் போதைப்பொருட்கள்தான் இந்தப் பொட்டலங்களும் என்று தெரிந்து பரங்கிப்பேட்டை போலீஸாரும் அதிர்ந்து போயினர்.

இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும் சிதம்பரம் டிஎஸ்பியான கார்த்திகேயன் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு போதைப்பொருள் பொட்டலங்கள் சம்பந்தமாக ஏன் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என விசாரித்திருக்கிறார். இதையடுத்து, கடந்த 21-ம் தேதி பரங்கிப்பேட்டை போலீஸார் போதைப்பொருள் பொட்டலங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். எஃப்.ஐ.ஆரில் நான்கு பொட்டலங்கள் மட்டுமே பிடிபட்டதாகக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், மீனவர்கள் எடுத்துக் கொடுத்தது எட்டுப் பொட்டலங்கள் என்பதால், ‘மீதி நான்கு பொட்டலங்கள் எங்கே?’ என சமூக ஊடகங்களில் சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள்.

இதையடுத்து டிஎஸ்பி கார்த்திகேயன், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பரங்கிப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் அங்கிருந்த போலீஸாரிடம் தீவிர விசாரணை நடத்திய அவர், இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்துச் சென்றார்.

இந்த நிலையில், டிஎஸ்பி அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன், முதல்நிலைக் காவலர் பாக்கியராஜ், மாவட்ட எஸ்பி தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராம்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி நேற்றிரவு உத்தரவு பிறப்பித்தார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இன்று காலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத்தனை தூரம் விசாரணை நடந்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மாயமான அந்த நான்கு பொட்டலங்கள் எங்கே என்பதற்கான விடை மட்டும் இன்னும் கிடைக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

7 hours ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

19 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்