கரோனா காலத்திலும் கோவையில் கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா வியாபாரம்!

By கா.சு.வேலாயுதன்

கரோனா காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வந்தாலும் கஞ்சா புழக்கத்துக்கு மட்டும் தட்டுப்பாடு வரவே வராது போலிருக்கிறது. கோவை பகுதியில் ஒன்றுக்கு இரண்டு மடங்கு விலையில் கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா பிசினஸ், போலீஸாரையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது.

கோவையில் கவுண்டம்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி, பீளமேடு ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் வெளியூரிலிருந்து வரும் நபர்கள், சில கல்லூரி மாணவர்கள் மூலம் பல ஆண்டுகளாகக் கஞ்சா விற்பனை நடக்கிறது. இவர்களால் கல்லூரி வகுப்பறைகள் வரை கஞ்சா விற்பனை பரவியிருக்கிறது.

இந்நிலையில், துடியலூர் அருகே லாரியில் கடத்திவரப்பட்ட கஞ்சா மூட்டைகள் கைப்பற்றப்பட்டிருப்பது, கரோனா காலத்திலும் போதைப் பொருள் புழக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. சமீபத்தில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு எஸ்பியான கலைச்செல்வன் உத்தரவின் பேரில் டிஎஸ்பியான வின்சென்ட் தலைமையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சரவணம்பட்டி துடியலூர் சாலையில் லாரி ஒன்று சோதனை இடப்பட்டபோது, அதில் 8 மூட்டைகளில் 200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, லாரி ஓட்டுநர் பார்த்தசாரதியைப் போலீஸார் கைது செய்தனர். மதுரை, பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த இவர், விசாகப்பட்டினத்திலிருந்து இரும்பு லோடு ஏற்றிவரும்போது அதில் கஞ்சா மூட்டைகளையும் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார். ஆந்திரத்தில் கிலோ 15 ஆயிரம் ரூபாய்க்கு கஞ்சாவை வாங்கி, மதுரையில் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கத் திட்டமிட்டதாக போலீஸாரிடம் அவர் சொல்லியிருக்கிறார்.

மேலும், “ஆந்திரத்திலிருந்து தினமும் 4 டன் வரை கஞ்சா கடத்தப்படுகிறது. என்னைப் போன்ற ஓட்டுநர்கள் மூலம்தான் இந்தக் கடத்தல் நடக்கிறது. எனக்கும் இந்தத் தொழில் குறித்து வேறொரு ஓட்டுநர் மூலம்தான் தெரியவந்தது. இதை மொத்த விலை கொடுத்து வாங்கிக்கொள்ள மதுரையில் ஆட்கள் இருக்கிறார்கள். அதற்குக் கமிஷன் புரோக்கர்களும் உண்டு. பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் முன்பு ஆந்திரத்தில் ஒரு கிலோ கஞ்சா 7 ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்தது. இப்போது அதுவே 15 ஆயிரம் ரூபாய் ஆகிவிட்டது.

முன்பு லாரியில் வேறு சரக்கு ஏற்றி வந்தாலும்கூட சோதனை கெடுபிடி நிறைய இருக்கும். பொதுமுடக்கம் வந்த பிறகு அந்த அளவுக்குக் கெடுபிடி இல்லை. ஆனால், கஞ்சாவுக்கு இப்போது கிராக்கியும் போட்டியும் அதிகமாகிவிட்டது. பொதுமுடக்கக் காலத்தில் பல்வேறு மாநிலங்களிலும் கஞ்சா வியாபாரிகள் அதிகமாகிவிட்டார்கள். அதனால்தான் விலையும் ஏறிவிட்டது” என்றும் தெரிவித்தாராம்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மதுரைக்குக் கொண்டு செல்லப்பட இருந்ததாக அவர் தெரிவித்தாலும், அவருக்கு உதவும் கஞ்சா வியாபாரிகள் கோவையிலேயே இருக்கலாம் என்று போலீஸார் கருதுகிறார்கள். பல்வேறு தனியார் கல்லூரிகளில் கஞ்சா விற்பனை கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. தற்போது கல்லூரிகள் பூட்டப்பட்டுவிட்டன. கல்லூரி தங்கும் விடுதிகளும் காலி செய்யப்பட்டு விட்டன. எனவே, மாணவர்களிடையே கஞ்சா கொண்டுபோகும் வழி முற்றிலும் அடைபட்டிருக்கிறது. எனவே, மாற்றுவழியில் முயற்சிகள் நடக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.

“கஞ்சா பிடிபட்ட சரவணம்பட்டி பகுதியில் ஐடி நிறுவனங்கள் ஏராளம். அவற்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனி வீடுகள் எடுத்துத் தங்கியுள்ளார்கள். அவர்களில் பலருக்கு ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ கொடுக்கப்பட்டு தமது வீடுகளைத் தங்களது நண்பர்கள் பொறுப்பில் விட்டுச்சென்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

அந்த நண்பர்கள் தங்கள் தொடர்பில் உள்ள ஹாஸ்டல் மாணவர்களைத் தங்களுடனே தங்க வைத்திருக்கலாம். அப்படியானவர்கள் மூலம் கஞ்சா விநியோகம் தடையின்றி நடக்க புரோக்கர்கள், வியாபாரிகள் செயல்படலாம் என்ற கோணத்தில் பழைய கஞ்சா வியாபாரிகள், புரோக்கர்களைக் குறி வைத்து விசாரித்து வருகிறோம்” என்றனர் கோவை போதை ஒழிப்புப் போலீஸார்.

கோவையில் பிடிபட்ட கஞ்சா தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி வின்சென்ட் பேசும்போது, ‘’பிடிபட்டிருப்பவர் லாரி டிரைவர் என்றாலும் விசாரணையில் கஞ்சா வியாபாரிதான் என்று தெரியவந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட ஆட்கள் ஆந்திராவிலும், மதுரையிலுமே உள்ளார்கள். இப்போது கரோனா தொற்று காரணமாக இந்த விசாரணைக்காக மாநிலம் விட்டு மாநிலம் மட்டுமல்ல, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் கூட நிறைய சிக்கல்கள் இருக்கின்றன.

மற்றபடி கோவையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு கஞ்சாவோ மற்ற போதைப் பொருட்களோ விநியோகிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவே உள்ளோம். இப்போது கல்லூரிகள் விடுமுறையால், விடுதிகள் எல்லாம் காலி செய்யப்பட்டு விட்டதனால் மாணவர்களுக்கும் கஞ்சா வியாபாரிகளுக்குமான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் சின்ன சின்ன அளவில் அங்கங்கே கஞ்சா பொட்டலம் கட்டி விற்கப்படுவதாகத் தெரிகிறது. அதனால் இப்போது இந்த கஞ்சா பிடிபட்ட பிறகு தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன!’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

9 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

8 days ago

மேலும்