பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, படம் எடுத்து ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; சினிமா பாணியில் அடுத்தடுத்த சம்பவங்கள்: மடக்கிப் பிடித்த போலீஸார்

By செய்திப்பிரிவு

சென்னையில் பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, படம் எடுத்து ரூ.2 லட்சம் பிணைத்தொகை கேட்டு மிரட்டிய பொறியாளரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். சிக்கிய நபர் 11 பெண்களிடம் இதுபோன்று நடந்தது தெரியவந்தது.

பழைய வண்ணாரப்பேட்டையில் வசிப்பவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிற மாணவி. இவர் தாயார் ஆண்ட்ராய்டு போன் வைத்துள்ளார். தாயாரின் செல்போனை எடுத்துப் பயன்படுத்தும் 14 வயது மாணவி திடீரென தனது பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்தார்.

பின்னர் அதில் தனது விதவிதமான புகைப்படங்களை செல்போனில் எடுத்துப் பதிவிட்டு வந்தார். அவரது புகைப்படத்துக்கு லைக் கிடைக்க ஆரம்பித்தவுடன் மேலும் உற்சாகமாகி அதிக படங்களைப் பதிவிட ஆரம்பித்தார். பெற்றோருக்கு இன்ஸ்டாகிராமை ஆராயும் அளவுக்கோ, மகளின் நடவடிக்கைகளைக் கவனிக்கும் அளவுக்கோ நேரமும், தொழில்நுட்ப அறிவும் இல்லை.

ஆரம்பமானது நட்பு வலை

இதனால் தொடர்ந்து புகைப்படங்களைப் பதிவிட்டு வந்த மாணவியை மர்ம நபர் ஒருவர் கண்காணிக்கத் தொடங்கினார். ஒவ்வொரு பதிவுக்கும் 'சூப்பர்', 'சோ நைஸ்', 'வெரி க்யூட்' என கருத்து கூற, மாணவி உற்சாகமடைந்தார். தனது புகைப்படத்துக்குக் கிடைத்த பாராட்டைப் பார்த்து, உற்சாகமாக மேலும் பல படங்களைப் பதிவிடத் தொடங்கினார். சிறுமியான அவருக்குப் பின்னால் வரப்போகும் ஆபத்து தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் அந்த நபர் தனது பெயர் சந்துரு எனக் கூறி அறிமுகப்படுத்திக்கொண்டு, மாணவியிடம் போன் நம்பரை வாங்கிப் பேசியுள்ளார். போனில் மாணவியின் அழகைப் புகழ்ந்து தள்ளி, அவர் மனதில் இடம் பிடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நபர் சொல்வதைக் கேட்கும் அளவுக்கு மாணவியிடம் நம்பிக்கை பெற்ற அவர், அந்த மாணவியைக் காதலிப்பதாகக் கூறி அவர் நம்பிக்கையைப் பெற்றார்.

இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். மாணவி இன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட படங்களை அனுப்பினார்.

ஆசைக்கு இணங்க மிரட்டல்

மாணவிக்குத் தெரியாமல் அப்படங்களைச் சேமித்துள்ளார் அந்த நபர். இதையடுத்து சில நாட்கள் கழித்து அந்த நபர் பேசும்போது அவரது விருப்பத்துக்கு மாணவியை இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார். பள்ளிக்குச் செல்வதுபோல் கோயம்பேடு வந்துவிடு என அழைத்துள்ளார். அப்போதுதான் எங்கோ தப்பு நடக்கிறது என மாணவிக்குப் பொறி தட்டியது. அப்படி எல்லாம் வர முடியாது என மறுத்தார்.

இதையடுத்து அவரது தனிப்பட்ட படத்தை வலைதளத்தில் பரப்பி விடுவதாக அந்த நபர் மிரட்ட, மாணவி அவரின் தொடர்பைத் துண்டித்தார். யாரிடமும் நடந்த விஷயத்தைச் சொல்லவில்லை. இந்நிலையில் சில நாட்கள் கழித்து மாணவியின் தாயாருக்கு மாணவியின் தனிப்பட்ட புகைப்படத்தை அனுப்பினார் அந்த நபர்.

தற்கொலைக்கு முயன்ற தாய்

பின்னர் மாணவியின் தாயாரிடம் பேசிய அவர், உன் மகளின் பல தனிப்பட்ட படங்கள் என்னிடம் உள்ளன. அதையெல்லாம் சமூக வலைதளங்களில் பரப்பி உன் குடும்ப மானத்தைக் கப்பலேற்றிவிடுவேன் என மிரட்டினார்.

''அப்படிச் செய்துவிடாதீர்கள். குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும்'' என மாணவியின் தாய் கெஞ்சினார். ''அப்படியானால், எனக்கு ஒரு 2 லட்சம் பணம் கொடுத்தால் படங்கள் அடங்கிய பென் டிரைவைத் தந்துவிடுகிறேன்'' என்று கூறினா. ''அந்த அளவுக்கு தன்னிடம் பணம் இல்லை'' என்று மாணவியின் தாயார் தெரிவித்தார். ''அப்படியானால் படத்தை வலைதளங்களில் வெளியிட்டுவிடுவேன்'' என்று அந்த நபர் கூறினார்.

தக்க சமயத்தில் கிடைத்த உதவி ஆய்வாளரின் உதவி

இதனால் மிரண்டுபோன மாணவியின் தாயார் தற்கொலை செய்யும் அளவுக்குச் சென்றார். இதையடுத்து அவரது உறவினர் ஒருவரிடம் விஷயம் கொண்டு செல்லப்பட, அவர் அளித்த யோசனைப்படி வண்ணாரப்பேட்டை உதவி ஆய்வாளர் ஜூலியஸ் சீசரிடம் விஷயம் கொண்டு செல்லப்பட்டது.

அனைத்து விஷயங்களையும் கேட்ட அவர் மாணவியின் தாயாருக்குத் தைரியம் கொடுத்தார். ''உங்கள் பெயரோ, மாணவியின் பெயரோ வெளியில் வராது. இதுபோன்ற குற்றவாளிகள் கைது செய்யப்படாவிட்டால் அடுத்து வேறு பெண்களிடமும் இப்படித்தான் நடப்பார்கள்'' என்றார்.

''நான் என்ன செய்யவேண்டும்'' என்று மாணவியின் தாயார் கேட்டுள்ளார். ''நான் சொல்கிறபடி பேசுங்கள். முதலில் பயப்படாதீர்கள். அவனிடம் என்னென்ன போட்டோக்கள் உள்ளன என்று கேளுங்கள், பணத்தைக் கொடுத்தால் நீ புகைப்படங்களைக் கொடுப்பாய் என்பது என்ன நிச்சயம் என்று கேளுங்கள்.

பொறியாளருக்கு போலீஸார் வைத்த பொறி

பின்னர் 2 லட்சம் முடியாது என்று பேரம் பேசுங்கள். இதனால் அவன் நீங்கள் கூறுவதை நம்புவான். பின்னர் பணத்தை எங்கு கொண்டுவந்து தரவேண்டும் என்று கேளுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்'' என்று கூறினார்.

அதன்படி மாணவியின் தாயார் பேச, ''புகைப்படங்கள் உள்ள பென் டிரைவையே உங்களிடம் கொடுத்துவிடுவேன், எனக்கு சொன்னபடி 2 லட்சம் தரவேண்டும், ஒரு பைசா குறைக்கமாட்டேன், போலீஸுக்குப் போனால் எனக்குத் தெரிந்துவிடும்'' என்றார் அந்த நபர்.

''அய்யய்யோ போலீஸுக்கெல்லாம் போகவில்லை, போலீஸுக்குப் போனால்தான் உங்களுக்குத் தெரிந்துவிடுமே. நான் என் பெண்ணின் வாழ்க்கையுடன் விளையாடுவேனா?'' என்று கூறி எங்கு பணத்தைத் தரவேண்டும் என்று கேட்டார்.

ஷேடோவில் சிக்கிய சைக்கோ நபர்

அதன்படி அந்த நபர் வண்ணாரப்பேட்டையில் உள்ள குறிப்பிட்ட ஒரு தனியான இடத்துக்கு வரச் சொன்னார். இந்தத் தகவலை அறிந்த காவல் உதவி ஆய்வாளர் ஜூலியஸ் சீசர் மேலதிகாரிகளிடம் தகவலைத் தெரிவித்து, ஷேடோ (போலீஸார் மறைந்திருந்து கண்காணித்தல்) போட்டுக் கண்காணித்துள்ளனர். குறிப்பிட்ட இடத்துக்கு மாணவியின் தாயார் செல்ல ஒரு இளைஞர் அவரை அணுகினார்.

சிக்கிய சுவாரஸ்யம்

''நீங்கள் யார்?'' என அவர் கேட்க, ''நான்தான் உங்களிடம் போனில் பேசிய சந்துரு, பணம் எங்கே?'' என்று கேட்டுள்ளார். ''பணம் தருகிறேன். போட்டோக்கள் எங்கே?'' எனக் கேட்க, பென் டிரைவைக் காண்பித்துள்ளார் அவர். ''பணத்தைச் சீக்கிரம் கொடுங்கள்'' என அந்த நபர் கேட்க, ''என் அண்ணன் கொண்டுவருகிறார்'' என்று மாணவியின் தாயார் கூற, அங்கு ஜூலியஸ் சீசர் தலைமையிலான டீம் ஆஜரானது.

தப்பி ஓட முயன்ற நபரை மடக்கிப் பிடித்த போலீஸ் அடுத்தடுத்த அதிரடியில் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தனர். அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த லேப்டாப், 3 செல்போன்களைக் கைப்பற்றினர். போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

11 பெண்களைச் சீரழித்த நபர்

மிரட்டி பிடிபட்ட நபர் பெயர் சந்துரு அல்ல என்பதும், பெண்களுடன் அவர் தொடர்புகொள்ள வைத்துள்ள பல பெயர்களின் ஒன்று என்பதும், அவர் பெயர் சாய் (எ) ராஜ சிவ சுந்தர் (29) என்பதும் தெரியவந்தது. விருதுநகர், பல்லம்பட்டி, ராஜன் தெருவைச் சேர்ந்த சாய் பிடெக். பட்டதாரி. படித்த அறிவை இதுபோன்ற காரியத்துக்கு அவர் பயன்படுத்தியுள்ளார்.

சாயின் லேப்டாப்பை ஆராய்ந்தபோது அவரிடம் 11 பெண்கள் சிக்கியது தெரியவந்தது. 11 பெண்களிடமும் போலீஸார் பரிவாகப் பேசி, உங்கள் பெயர் அடையாளம் எதுவும் வராது எனக்கூறி புகார் அளிக்கச் சொன்னபோது அனைவரும் மறுத்துவிட்டனர். மீறிக் கேட்டால் தற்கொலை செய்துகொள்வோம் எனக் கூறியுள்ளனர்.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கைது செய்யப்பட்ட சாய் என்கிற ராஜ சிவ சுந்தரின் வேலையே இதுபோன்று இன்ஸ்டாகிராமில், முகநூலில் பெண்களிடம் பழகி, காதலிப்பதாகப் பேசி, தனிப்பட்ட புகைப்படங்களைப் பெற்று, அதை வைத்து மிரட்டி காரியம் சாதிப்பது, மறுப்பவர்களிடம் பெரிய தொகையைக் கறப்பது என இவற்றையே வாடிக்கையாக வைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ராஜ சிவ சுந்தரத்தைக் கைது செய்த போலீஸார் அவர் மீது போக்சோ சட்டம் 11, 12, 14, 18 P0CS0 Act மற்றும் 385 (மிரட்டுதல், பயமுறுத்துதல்) IPC பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

பெற்றோர்களுக்கு போலீஸாரின் அறிவுரை

பின்னர் மாணவியின் தனிப்பட்ட படங்களை போலீஸார் அழித்து அந்தத் தகவலை பெற்றோரிடம் தெரிவித்தனர். விடலைப் பருவத்தினர் ஆணோ, பெண்ணோ அவர்களைப் பெற்றோர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். எது சரி, எது தவறு என்று சொல்லித் தர வேண்டும், நண்பர்களாகப் பெற்றோர் பழகினால் பிள்ளைகள் எண்ணங்களைப் பரிமாறுவார்கள் என போலீஸார் அறிவுரை கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

க்ரைம்

17 hours ago

க்ரைம்

20 hours ago

க்ரைம்

21 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

மேலும்