சென்னை வேளச்சேரியில் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த வேன் ஓட்டுநர் ரூ.52 லட்சத்துடன் மாயமானார். அந்த வேன் ஆர்.கே.நகர் அருகே சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது.
வங்கிகளுக்குச் சொந்தமான ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை தி.நகரில் உள்ள தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இவர்கள் வங்கியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களிடம் பணத்தைப் பெற்று ஏடிஎம் மையத்தில் நிரப்புகின்றனர். இதற்கான வாகனம், பாதுகாவலர், ஊழியர்களுடன் பணத்தை எடுத்துச் சென்று நிரப்பும் பணியில் ஈடுபடுவார்கள்.
வழக்கம்போல் நேற்றும் ரூ.87 லட்சம் பணத்தை தி.நகர் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொண்டு விஜயா வங்கி ஏடிஎம்மில் நிரப்பக் கொண்டு சென்றனர். வேனில் ஓட்டுநர் , காவலாளி உட்பட 4 ஊழியர்கள் இருந்தனர். வேனை ஓட்டுநர் அம்புரோஸ் என்பவர் ஓட்டி வந்தார்.
சென்னை வேளச்சேரி விஜயா நகர் ஒன்றாவது பிரதான சாலையில் உள்ள விஜயா வங்கி ஏடிஎம் மையத்தில் பணத்தை நிரப்பச் சென்றனர். முதலில் தேனாம்பேட்டையில் இருந்த 5 ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பிவிட்டு வேளச்சேரி வந்தனர். வேளச்சேரி விஜயா நகர் ஒன்றாவது பிரதான சாலையில் உள்ள விஜயா வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப வந்தபோது காரில் இருந்த மூவரும் ஏடிஎம் மையத்திற்கு பணத்தை நிரப்பச் சென்றனர்.
காவலாளியும் அவர்களுக்குத் துணையாக ஏடிஎம் மையத்திற்குச் சென்றார். வேனில் ஓட்டுநர் அம்புரோஸ் மட்டும் இருந்தார். வேனை ஓரமாக நிறுத்துவதுபோல் பாவனை செய்து, வேனை எடுத்துக்கொண்டு அம்புரோஸ் மாயமானார்.
வேனில் ரூ.52 லட்சம் பணம் இருந்தது. வேன் மாயமானதை அடுத்து வெளியில் வந்த ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். பின்னர் ஓட்டுநர் அம்புரோஸுக்கு போன் செய்தனர். ஆனால் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. உடனே தன்னுடைய நிறுவன உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் காவல் கட்டுப்பாட்டறைக்குப் புகார் அளித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீஸார் விசாரணை நடத்தினர். அம்புரோஸ் வீட்டுக்கு போலீஸார் சென்றனர். ஆனால் அங்கு அம்புரோஸ் என்று யாரும் இல்லை என்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் வேன் ஓட்டுநர் அம்புரோஸ் கடந்த 3 மாதத்துக்கு முன் பணியில் சேர்ந்ததும், அவர் போலியான முகவரி கொடுத்ததும் தெரியவந்தது.
ஆனாலும், அம்புரோஸ் மனைவி இருக்கும் இடத்தை போலீஸார் கண்டுபிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அம்புரோஸ் குறித்து தகவல் எதுவும் இல்லை. வேன் ஓட்டுநர் அம்புரோஸ் பணத்துடன் மாயமானாலும் அந்த வேனில் ஜிபிஎஸ் கருவி இருந்துள்ளது. அதை வைத்து போலீஸார் சோதித்தபோது அந்த வேன் ஆர்.கே.நகர் டாஸ்மாக் பார் முன் நின்றது தெரியவந்தது.
உடனடியாக அங்கு சென்று வேனை ஆய்வு செய்தபோது வேனில் பணம் எதுவும் இல்லை. வேனை நிறுத்திவிட்டு அம்புரோஸ் பணத்துடன் மாயமானது தெரியவந்தது. அம்புரோஸைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அம்புரோஸ் மட்டும் இதைச் செய்திருக்க முடியாது என போலீஸார் கருதுகின்றனர். பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடனே அம்புரோஸ் பணிக்குச் சேர்ந்தது தெரியவந்துள்ளது.
சென்னையில் இதேபோன்று பலமுறை பணத்துடன் வேன் ஓட்டுநர்கள் தப்பிச் சென்றதும் பின்னர் பிடிபட்டதும் நடந்துள்ளது. வேளச்சேரி மற்றும் ஆர்.கே.நகரிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
3 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago