சூளகிரி அருகே கார் தீப்பிடித்ததில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தில், கூலிப் படையை ஏவி தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தொழிலதிபரின் உறவினர் மற்றும் கூலிப்படையினரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு (46). இவர் உத்தனப்பள்ளி அருகே நாயக்கனப்பள்ளியில் அட்டை பெட்டி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி நீலிமா (42).
கடந்த 11-ம் தேதி ஆனந்த பாபுவும், நீலிமாவும் காரில் தங்களது நிறுவனத்துக்கு சென்றனர். இரவு, நீலிமா மட்டும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை, கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளியைச் சேர்ந்த முரளி (25) என்பவர் ஓட்டிச் சென்றார்.
உத்தனப்பள்ளி - ஓசூர் சாலையில் சானமாவு வனப்பகுதி யில் சென்று கொண்டிருந்த போது, கார் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் முரளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். நீலிமா 60 சதவீதம் தீக்காயங்களுடன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவம் விபத்து இல்லை எனவும், திட்டமிட்டு கூலிப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் தெரியவந்தது. சம்பவ இடத்தில் எரிந்து போன நிலையில் இருந்த லாரி, காரில் ஆய்வு செய்த போலீஸார், விபத்து காரணமாக தீ பற்றியிருக்க வாய்ப்பு இல்லை என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘ஆனந்தபாபு புதிதாக தொழில் தொடங்குவது தொடர்பாக அவரது உறவினருடன் கருத்து வேறுபாடும், பிரச்சினையும் இருந்துள்ளது. ஓசூரில் பிரபலமான அவர், ஆனந்தபாபு மற்றும் நீலிமாவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக மதுரையைச் சேர்ந்த கூலிப்படையினர் ஓசூரில் முகாமிட்டு, ஆனந்தபாபுவின் நடவடிக்கைகளை நோட்டமிட்டனர்.
சம்பவத்தன்று, ஆனந்தபாபு, நீலிமா ஆகியோர் காரில் வருவதாக நினைத்த கூலிப் படையினர், இருவரையும் கொல்ல திட்டமிட்டு லாரி மூலம் கார் மீது மோதினர். பின்னர், காரின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் முரளி உயிரிழந்தார். ஆனந்தபாபு அன்றைய தினம் தனது நண்பர்களைச் சந்திக்க சென்றதால், அவர் நீலிமாவுடன் காரில் வீடு திரும்பவில்லை. இதனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவத்தில் இதுவரை 2 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,’’ என்று தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆனந்தபாபுவின் உறவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
15 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
7 days ago