பெ.ஸ்ரீனிவாசன்
திருப்பூர்
குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க புறநகர் மற்றும் கிராமப்புற வங்கிக் கிளைகள், ஏடிஎம் மையங்களில் காவலாளிகள் நியமிக்கப்படுவது கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் தரப்பில் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் காம நாயக்கன்பாளையம் அருகேயுள்ள கே.கள்ளிபாளையத்தில் செயல் பட்டுவரும் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான கிளையில் கடந்த 7-ம் தேதி இரவு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர். கிராமப் பகுதி என்பதாலும், அருகில் குடியிருப்புகள் பெரிய அளவில் இல்லாத காரணத்தாலும் அந்த வங்கியை சுற்றிலும் தடுப்பு சுவர் எழுப்பப்பட்டு முள்வேலி அமைக்க பட்டுள்ளது. இருப்பினும் ஒரு புறத்தில் முள்வேலியை துளை யிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர் கள், பக்கவாட்டு ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்து வங்கிக்குள் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள் ளனர். வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் அவர்கள் கை வைக்க வில்லை என்பது போலீஸாருக்கு புரியாத புதிராக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காமநாயக்கன் பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அந்த வங்கிக்கு இரவு நேர காவலாளிகள் யாரும் நியமிக்கப் படவில்லை என்பது முதற்கட்டமாக தெரியவந்தது. இதை கொள்ளை யர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்து பாதுகாக்க இயலாத பணம், நகை, சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வங்கிகள் தான் பாதுகாப்பானவை எனக் கருதி எடுத்துச் செல்கின்றனர். ஆனால் அந்த வங்கிகளே பாதுகாப்பாக இல்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்வி தான் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ‘கன்ஸ்யூமர் வாய்ஸ்’ அமைப்பின் செயலாளர் என்.லோகு கூறும்போது, ‘ஆரம்பத்தில் அனைத்து வங்கி களிலும் காவலாளிகள் நியமனம் பின்பற்றப்பட வேண்டிய விஷய மாக இருந்தது.
தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலமாக காவலாளிகள் ஷிப்ட் முறையில் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் நியமிக்கப்பட்டனர். அதற்கு பிறகு கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் வருகையால், தனியார் வங்கிகளை தவிர்த்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் காவலாளிகள் நியமிக்கப்படுவதை நிறுத்தி விட்டன. கண்காணிப்பு கேமரா இருக்கும் தைரியத்தில், மாதந் தோறும் காவலாளிகளுக்கு ஊதியம் வழங்குவதை விரும்பாத வங்கிகள் சிக்கன நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்து விட்டன. ஆனால் தனியார் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் காவலாளிகள் பணியில் உள்ளனர்.
கேமராக்களை நம்பி காவலாளி களை நியமிக்காமல் இருப்பது வளர்ந்த நகரப்பகுதிகளுக்கு சரியாக இருக்கும். புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இது உகந்ததாக இருக்காது. கிராமப்புறங்களில் ஆள் நடமாட்ட மில்லாத பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க செல்வோருக்கு காவலாளிகளைத் தவிர்த்து என்ன பாதுகாப்பு உள்ளது. காவலாளிகளின் பணி கண்காணிப்பு மற்றும் உதவி என்று வரையறுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு உதவியாகவும் அவர்கள் இருப்பார்கள்.
மேலும் கேமராக்கள் என்பவை கருவிகளே. அவற்றின் ஒயர் இணைப்புகளை துண்டித்தால் அனைத்தும் முடிந்து விடும். பொதுமக்களின் பணத்துக்கு வங்கிகளே பொறுப்பு என்பதால், சிக்கன நடவடிக்கை எனப் பாராமல் அனைத்து புறநகர், கிராமப்புறங்களில் உள்ள வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்களுடன் காவலாளிகளை நியமனம் செய்ய ரிசர்வ் வங்கி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘ஏடிஎம் மையமாக இருந்தாலும், வங்கிக் கிளைகளாக இருந்தாலும் குற்றச்சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வங்கி நிர்வாகங்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக உள்ளது என்றாலே கொள்ளை யர்கள், திருடர்கள் உள்ளே வர யோசிப்பார்கள்’ என்றனர்.
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, ‘வங்கிகள், ஏடிஎம் மையங்களில போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது மத்திய அரசு சார்பிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஏடிஎம் இயந்திரங்களை அவ்வளவு எளிதில் யாரும் உடைக்க முடியாது. செலவு உள்ளிட்ட காரணங்களால் சில வங்கிகளில் காவலாளிகள் நியமிக்கப்படுவதில்லை. இது தொடர்பாக மாதாந்திர அனைத்து வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும். அனைத்து வங்கிகள், ஏடிஎம் மையங்களில் காவலாளிகளை நியமனம் செய்ய அறிவுறுத்தப்படும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
க்ரைம்
17 hours ago
க்ரைம்
18 hours ago
க்ரைம்
19 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago