செல்போன் திருடப் பயிற்சி; தினசரி சம்பளம், ஊக்கத்தொகை: ராஜ வாழ்க்கை அனுபவித்த ஆந்திர கும்பல் கைது

By செய்திப்பிரிவு

சென்னை

செல்போன் திருடப் பயிற்சி கொடுத்து, தினசரி சம்பளமும் கொடுத்து, நன்றாகத் திருடினால் ஊக்கத்தொகையும் அளித்த ஆந்திராவைச் சேர்ந்த கொள்ளையன் தன்னுடைய கும்பலுடன் சிக்கியுள்ளார்.

சென்னையில் செல்போன் திருட்டு, செல்போன் பறிப்பு என்பதை திருடுபவர்கள் சிறப்பான தொழிலாகவே பார்க்கிறார்கள். செல்போனை வாங்கும் நபர்கள் புதிய செல்போனுக்கு இன்சூரன்ஸ் செய்துவிடுகிறார்கள். சிலர் வாங்கி இரண்டு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் செல்போன் பறிப்பு அல்லது திருட்டில் செல்போனைப் பறிகொடுக்கும் நபர்கள் அதுகுறித்து போலீஸில் புகார் அளிப்பதில்லை.

போலீஸில் இன்சூரன்ஸுக்கான தொகையைப் பெற புகார் அளிக்கின்றனர். பழைய செல்போன்களை உபயோகிப்பவர்கள், நடுத்தரக் குடும்பத்தினர் போலீஸுக்கு போய் புகார் கொடுத்து அவர்கள் பின்னால் அலைய முடியாது என விட்டுவிடுகின்றனர். இது செல்போன் திருடுபவர்களுக்கும், செல்போன் பறிப்பாளர்களுக்கும் வசதியாகிவிடுகிறது.

செயின் பறிப்பு போன்று செல்போன் பறிப்பு ஆபத்தானது அல்ல. பறிகொடுப்பவர்களில் 70 சதவீதத்தினருக்கு மேற்பட்டோர் ஏதோ ஒரு காரணத்தால் போலீஸை அணுகுவதில்லை. இதனால் செல்போன் பறிப்பு அதிகம் நடக்கிறது. சென்னையில் அதிக அளவில் செல்போன் பயன்படுத்துபவர்கள் இருப்பதும், ஜனநெருக்கடி அதிகம் உள்ளதாலும் சென்னைவாசிகள் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர்.

சென்னையில் ஜன நெருக்கடி மிக்க பூக்கடை, தி.நகர், அடையாறு, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் செல்போன் திருட்டு அதிகம் நடப்பதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இதைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில் பூக்கடை அருகே பிக் பாக்கெட் அடித்த நபர் ஒருவர் சமீபத்தில் சிக்கினார்.

வழக்கமான பிக் பாக்கெட் தானே என விசாரணை நடத்தியபோது அவர் நடந்துகொண்ட விதமும் போலீஸாரிடம் தனியே பேரம் பேசியவிதமும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பொதுவாக பிக் பாக்கெட் அடிப்பவர்கள் சிறு குழுக்களாக இருப்பார்கள். போதைக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள். பிடிபட்டவுடன் அழுவார்கள், பின்னர் உண்மையை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் இந்த நபர் அவ்வாறில்லாமல் யதார்த்தமாக, ''சார். இந்த விஷயத்தைக் கண்டுக்காதீங்க. நான் பார்த்து அவ்வப்போது கவனித்துவிடுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

உஷாரான போலீஸார், ''எப்படி கவனிப்பாய், எவ்வளவு தருவாய், நீயே பிக் பாக்கெட். ஒரு நாளைக்கு உனக்கு கிடைப்பதில் என்ன தருவாய்?'' என வலை விரித்துள்ளனர்.

''என்னை சாதாரணமாக எடைபோட்டுவிடாதீர்கள். எனக்கு டெய்லி பேட்டா 500 ரூபாய் உண்டு. 3 செல்போன் என் கோட்டா. அதற்குமேல் அடித்தால் ஊக்கத்தொகை உண்டு. ஆகவே, உங்களுக்குத் தருவதில் பிரச்சினை வராது'' என்று அந்த பிக் பாக்கெட் நபர் தெரிவித்துள்ளார்.

இலக்கு வைத்து திருட்டா என உஷாரான போலீஸார், ''உன்னிடம் வாங்கிவிட்டு உன்னை விடுவிக்கலாம். மற்றவர்களையும் நாங்கள் ஏன் விடுவிக்க வேண்டும்’’ எனக் கேட்க, ''சார் அதுக்குத்தான் சொல்கிறேன், 10 பேருக்குமேல் வைத்து எங்கள் முதலாளி கம்பெனி மாதிரி நடத்துகிறார். ஆளுக்கு இவ்வளவுன்னு கணக்குப்போட்டு கொடுத்துவிடுவார்'' என்றவுடன் அனைவரையும் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். ''சரி டீல் பேசி முடிக்கலாம்'' எனக் கூறிய போலீஸார், அந்த நபருடன் சம்பந்தப்பட்ட வீடு அமைந்துள்ள சோழாவரம் சென்றுள்ளனர்.

அங்கு கும்பல் தலைவன் ரவியிடம் அழைத்துச் செல்ல அவரிடம் பேசுவதுபோல் அனைவரையும் சுற்றி வளைத்து போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட செல்போன்களையும் கைப்பற்றினர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த கும்பல் சுமார் 11 பேர் சென்னையில் வீடு எடுத்து, தங்கி செல்போன் திருட்டைச் செய்துவிட்டு மொத்தமாக அவற்றை ஆந்திராவுக்கு கொண்டு சென்று விற்று வந்தது தெரியவந்தது.

அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீஸார் நடத்திய விசாரணையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் வெளியாகியுள்ளன.

பின்னணி என்ன?

கொள்ளைக் கும்பல் தலைவன் ரவி சென்னையில் இதுபோன்ற செல்போன், கைப்பைகளைத் திருடி வந்துள்ளார். பின்னர் படிப்படியாக ஆட்களைச் சேர்த்துள்ளார். அவர்களுக்கு செல்போன் , கைப்பைகளைத் திருடுவதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கும்பலாக இருக்கும் இடங்களில் பேப்பர் படிப்பதுபோல் செல்போனைத் திருடுவது, கவனத்தை திசை திருப்பி செல்போனைத் திருடுவது, ஐந்து அல்லது ஆறு பேர் சேர்ந்து கும்பலாகத் திருடுவது என அவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளார் ரவி.

பயிற்சித் திருடர்களை (அப்ரண்டீஸ்களை) சில நாட்கள் தேர்ந்த திருடர்களுடன் அனுப்பி நேரடி களப்பயிற்சியும் அளித்து தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். சிக்கினால் எந்தத் தடயமும் இல்லாமல் தான் மட்டுமே வயிற்றுப் பிழைப்புக்காக பிக் பாக்கெட் அடித்ததுபோல் காண்பிக்க வேண்டும் என பயிற்சியின்போது பால பாடமும் எடுக்கப்பட்டுள்ளது.

தினமும் ஒரு நபர் 3 செல்போன்களைத் திருடிக்கொண்டு வரவேண்டும், ஆப்பிள் செல்போன் போன்று விலை உயர்ந்த செல்போன், கைப்பை, கூடுதலாக செல்போனைத் திருடி வந்தால் வார இறுதியில் பாராட்டுக் கூட்டம் நடத்தி ஊக்கத்தொகையும் வழங்கியுள்ளார் ரவி.

வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தொழில். பின்னர் திருடிய செல்போன்களை மொத்தமாக சனிக்கிழமை ஆந்திராவுக்குக் கொண்டு சென்று அங்கு கைமாற்றி விட்டு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் நேரம் செலவழித்துவிட்டு திங்கட்கிழமை சென்னை வந்து அந்த வாரத்தின் தவறுகளைப் பட்டியலிட்டு அவைநேராமல் இருக்க உறுதிமொழி எடுத்துவிட்டு தொழிலுக்குக் கிளம்பிவிடுவர்.

பண்டிகை நாட்களில் மட்டும் விடுமுறை இல்லாமல் ஓவர் டைம் பார்ப்பதுண்டு. அதற்குத் தனியாக இன்சென்டிவ் உண்டு எனத் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் ஒரு திட்டத்துடன் சென்னைவாழ் மக்களின் செல்போன்களை ஆந்திராவுக்கு இடம்மாற்றியுள்ளனர் என போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுவரை ஒரு நாளைக்கு 35 செல்போன், வாரத்தில் 5 நாட்கள் என இரண்டு ஆண்டுகளாக ஆயிரக்கணக்கில் செல்போன்களைத் திருடியுள்ளனர். இவர்களிடம் செல்போனை வாங்கிய மொத்த வியாபாரியைப் பிடிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

மேலும்