சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டுக்கான  ‘ஸ்கோச்’ விருது: சென்னை போலீஸ் தட்டிச் சென்றது

By செய்திப்பிரிவு

டெல்லி

சிறந்த மேலாண்மைச் செயல்பாட்டிற்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வழங்கப்படும ‘ஸ்கோச்’ விருதுகளை சென்னை சட்டம் ஒழுங்கு போலீஸார், போக்குவரத்து போலீஸார் பெற்றுள்ளனர்.

‘ஸ்கோச்’ விருதுகள் ஆண்டுதோறும் மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்படுகிறது. அரசின் துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன் மாதிரிக்காக தங்க விருது மற்றும் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டு 52-வது ‘ஸ்கோச்’ விருது தமிழகத்தில் வேளாண் துறையில் சிறப்பாகச் செயலியை வடிவமைத்ததற்காக வழங்கப்பட்டது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் மானியத் திட்டங்கள், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர் காப்பீடு விவரம் அறிதல், விதை இருப்பு விவரம் அறிதல், உரம் இருப்பு அறிதல், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள், விளைபொருட்களின் சந்தை விலை அறிதல், வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல், வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் வருகை ஆகிய 9 வகையான சேவைகள் இடம் பெற்ற ‘உழவன் கைபேசி செயலி’க்கு தமிழகத்துக்கு விருது கொடுக்கப்பட்டது.

இதேபோன்று மெட்ரோ ரயிலின் நகர்ப்புறக் கட்டமைப்பிற்கு ஏற்ப செயல்பாடு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் மேலாண்மை ஆகிய சிறப்பான பணிக்காக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்துக்கு ‘ஸ்கோச்’ விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சென்னை காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்துக் காவல் என இரண்டு பிரிவுகளும் ‘ஸ்கோச்’ விருதுக்கு மோதின.

சென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறையின் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனின் கனவுத் திட்டமான ‘மூன்றாவது கண்’ திட்டத்தின் மூலம் சென்னையில் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றச்செயல்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு குற்றங்கள் ஒரு காலகட்டத்தில் திடீரென அதிகரித்தன. முதல் முறையாக குற்றச்செயலில் ஈடுபடும் இளைஞர்கள் பெருகினர். பைக் திருட்டு, வழிப்பறி அதிகரித்ததால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்தன. சில சம்பவங்களில் உயிரிழப்பும், காயமடைவதும் நடந்தது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குற்றங்களைத் தடுக்கும் விதமாக மூன்றாவது கண் எனும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் நகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், சிறு வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டது.

காவல் ஆணையரின் கோரிக்கையை ஏற்று பலரும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவினர். இன்னும் பலர், தெருக்கள், சாலைகளில் காவல் துறை கண்காணிப்பு கேமரா அமைக்க உதவி செய்தனர். காவல்துறையும் சென்னையின் முக்கியச் சாலைகள், சிக்னல்கள், தெருக்களில் சிசிடிவி கேமராக்களை அமைத்தது.

இதுதவிர அண்ணா நகர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதி நவீன ANPR கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவை வெளிநாடுகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் ஆகும். இதன்மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் அனைத்துச் செயல்பாடுகளும் துல்லியமாக கேமராவால் படம்பிடிக்கப்பட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநருக்கு நோட்டீஸும் அளிக்கப்படும்.

இத்தகைய நவீன கேமராக்கள் ஓடும் வாகனத்தின் வேகம் மற்றும் நம்பர் பிளேட்டைத் துல்லியமாக படம் எடுத்துவிடும். இத்தகைய நவீன வரவுகள் மூலம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறினால் மூன்றாவது கண் நம்மைக் கண்காணிக்கிறது என விதிகளை மீறாமல் நடந்துகொள்வார்கள். இதேபோன்று காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பெரிதும் உதவும் செயலியாக உள்ளது.

மேற்கண்ட நடைமுறைகள் அல்லாமல் 5 லட்சம் சிசிடிவி கேமராக்களை சென்னையில் அமைக்க சென்னை காவல்துறையும், ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனும் முயற்சி எடுத்து வருகின்றனர். இதன்மூலம் சென்னையின் சட்டம் ஒழுங்கு காவல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

சிசிடிவி காட்சிகள் மூலம் தற்போது சென்னையில் இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. 1. குற்றம் செய்தால் சிக்கிக் கொள்வோம் என குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது. 2. குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிக் கொள்வதால் பல சிக்கலான வழக்குகளில் எளிதாக துப்பு துலக்க முடிகிறது.

மேற்கண்ட நடைமுறைகளை தனது பணிக்காலத்தில் சென்னையில் நிறுவிய சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சிறந்த ஆளுமைக்கான விருது சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்பட்டது.

மேற்கண்ட பணியை முன் வைத்து ‘ஸ்கோச்’ விருதுக்கு சென்னை சட்டம் ஒழுங்கு போலீஸ் போட்டியிட்டது. இதேபோன்று போக்குவரத்து காவல்துறையில் பணமற்ற பரிவர்த்தனை முறையான இ சலானை அறிமுகபடுத்தியதன்மூலம் லஞ்சம், பணமுறைகேடு இல்லாத நிலை உருவானது. இது தவிர தற்போது போலீஸார் அபராதம் விதிக்க நவீன கருவிகள், உடலில் பொருத்தப்பட்ட கேமராக்கள், அதி நவீன போக்குவரத்து விதிமீறலை கண்காணித்து புகைப்படம் எடுக்கும் கேமராவை அமைத்தது போன்ற காரணங்களால் போக்குவரத்து காவல்துறை போட்டியிட்டது.

மூன்று கட்டமாக நடக்கும் விருதுக்கான தேர்வில் முதற்கட்டத்தேர்வை கடந்தப்பின்னர், சமூக வலைதளங்களில் வாக்கு எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவது. இதற்கான பிரச்சாரத்தை சமூக வலைதளத்தில் செய்யப்பட்டது.

இதேபோன்று சென்னை போக்குவரத்து காவல்துறையும் ஸ்கோச் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. போக்குவரத்து காவல்துறையில் லஞ்சம், அதிக அபராதம் உள்ளிட்ட பல விஷயங்களை தவிர்க்க இ .சலான் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர தற்போது பணமில்லாப் பரிமாற்ற முறை கொண்டுவரப்பட்டு நவீன செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நவீன செயலி மூலம் ஒரு வாகனம் மற்றும் வாகனம் ஓட்டுபவர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டிருந்தால் அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும். இது தவிர போக்குவரத்து போலீஸாருக்கு முதற்கட்டமாக பாடி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேவையற்ற மோதல்கள் தவிர்க்கப்படும். போலீஸார் வாகன ஓட்டிகள் நல்லுறவுக்கு உதவும்.

மேற்கண்ட காரணங்களுக்காக சிறப்பான செயலியை, கருவியை அறிமுகப்படுத்தியதற்காக போக்குவரத்து காவல்துறையும் போட்டியில் தகுதி பெற்றுள்ளது. இ சலான் மூலமாக இந்த ஆண்டு ரூ.30 கோடி வசூலானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஒடிசா மாநில காவல்துறை, துடிப்புமிக்க இணைய வலையமைப்பிற்காக ( Dynamic web portal ) தங்க விருது பெற்றது. இந்த ஆண்டு 2 விருதுகளை சென்னை காவல்துறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அசோகா சாலையில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆப் இந்தியாவில் நடைபெற்ற விழாவில், மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடமிருந்து சென்னை கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் அருண் ஆகியோர் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

23 hours ago

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

மேலும்