சென்னை,
ஓடும் ரயிலில், ரயில்வே பொறியாளரின் உணவில் மயக்கப் பொடி தூவி 2 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்ற எய்ட்ஸ் நோயாளியை ஒரு மாதத்துக்குப் பின் ரயில்வே போலீஸார் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னை தெற்கு ரயில்வேயில் பொறியாளராகப் பணியாற்றுபவர் அமித்குமார் (30). கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் சென்னையில் பணி நிமித்தம் தங்கவேண்டி இருப்பதால் அயனாவரத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 18-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள தனது குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றுவிட்டு ஹவுரா எக்ஸ்பிரஸ் மூலம் சென்னை திரும்பினார்.
அமித்குமார் வீட்டிலிருந்து அவருக்கான மதிய உணவைத் தயாரித்து கொடுத்தனர். ரயில் ஆந்திர மாநிலம் ஏலூரு அருகே வந்தபோது மதிய உணவு உண்பதற்காக அமித் தயாரானார். ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கடையில் தொட்டுக்கொள்ள சிப்ஸ் வாங்கிவிட்டு மீண்டும் ரயிலில் ஏறி, தான் கொண்டுவந்த உணவை அவர் சாப்பிட்டார்.
சாப்பிட்ட சற்று நேரத்தில் ரயிலின் இருக்கையில் மயங்கி விழுந்தார். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக சக பயணிகள் நினைத்தனர். மயக்கத்தில் கண்விழிக்காமல் அமித்குமார் கிடக்க, எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. மயக்க நிலையில் கிடந்த அமித்குமார் குறித்த தகவல் கிடைத்த ரயில்வே போலீஸார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஒருநாள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் கண் விழித்த அமித்குமார் தான் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி திருட்டுப் போனதைக் கண்டு திடுக்கிட்டு ரயில்வே போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். தான் மதிய உணவு சாப்பிட்ட பின் தலை சுற்றியதாகவும், அதன் பின்னர் மயங்கிய தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை, கண் விழித்தால் இங்கு இருக்கிறேன் என்றும் அமித்குமார் தெரிவித்துள்ளார்.
அமித்குமாருக்கு கடுமையான மயக்கத்தை ஏற்படுத்தும் மாத்திரை கொடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். யாரோ மர்ம நபர் ஒருவர் அமித்குமார் உணவில் மயக்கப்பொடியைத் தூவி, செயினைத் திருடிச் சென்றிருக்கலாம் என ஊகித்த போலீஸார் சம்பவம் நடந்த நாள் அன்று அமித்குமார் வந்த ரயில் பெட்டி அருகே உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அமித்குமாரை அமரவைத்து சோதித்தனர்.
மஞ்சள் டி ஷர்ட் அணிந்து சென்ற நபரை தனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் என சிசிடிவி காட்சிகளின் மூலம் அமித்குமார் அடையாளம் காட்டினார். தொடர் காட்சிகள் மூலம் அவர் டிக்கெட் பதிவு மையத்துக்குச் செல்வதைக் கண்டுபிடித்து, முன்பதிவு மையத்துக்குச் சென்று அந்த நேரத்தைக் கணக்கிட்டு சோதனை நடத்தினர். அங்கு நடந்த விசாரணையில் மஞ்சள் டி ஷர்ட் அணிந்த நபர் கொல்கத்தா செல்ல முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டை ரத்து செய்து சென்றது தெரியவந்தது.
அந்த நபர் அளித்திருந்த செல்போன் எண்ணை ரயில்வே சைபர் பிரிவு போலீஸார் டிராக் செய்தபோது செல்போன் எண் சென்னையிலேயே இருப்பது தெரியவந்தது. அதன் சிக்னலைக் கண்காணித்து வந்த ரயில்வே போலீஸார், 2 நாட்களுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்த நபர் நுழைந்தபோது அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் பிரபல மயக்க மாத்திரை திருடன் சுபுகான்கர் சங்பூர்த்தி என்பது தெரியவந்தது. எப்படி நகையைத் திருடினாய் என போலீஸார் கேட்க, அமித்குமாரைத் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் ஏலூரு ரயில் நிலையத்தில் டிபன்பாக்ஸை வைத்துவிட்டு சிப்ஸ் வாங்க அமித்குமார் இறங்கினார். அப்போது டிபன் பாக்ஸில் இருந்த உணவில் மயக்கம் ஏற்படுத்தும் மாத்திரையைப் பொடியாக்கித் தூவியதாகவும், அவர் உணவு உண்ட சில நிமிடங்களில் மயங்கி விட, அவர் அருகில் அமர்ந்திருந்த தான் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி எடுத்துச் சென்றதாகவும் சுபுகான்கர் சங்பூர்த்தி தெரிவித்துள்ளார்.
அமித்குமாரிடம் சுபுகான்கர் திருடிய தங்கச் சங்கிலியை போலீஸார் பறிமுதல் செய்தனர். சுபுகான்கரிடம் நடத்திய விசாரணையில் போலீஸாருக்குத் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அவர் எய்ட்ஸ் நோயாளி என்பதும் நீரிழிவு நோய் காரணமாக இன்சுலின் பயன்படுத்துபவர் என்பதும் தெரியவந்தது.
இதுவரை 10-க்கும் மேற்பட்ட இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சுபுகான்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் எயிட்ஸ் குறித்த விபரங்களைத் தாக்கல் செய்து சிறையில் அடைத்தனர்.
ரயிலில் பயணம் செய்பவர்கள் மற்றவர்களிடம் உணவுப்பொருட்களை வாங்கி உண்பது கூடாது என்று போலீஸார் எச்சரித்த நிலையில், தனியாகப் பயணம் செய்பவர்கள் தாங்கள் கொண்டுவரும் உணவையும் பாதுகாத்து உண்ண வேண்டும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
2 hours ago
க்ரைம்
5 hours ago
க்ரைம்
5 hours ago
க்ரைம்
7 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago