திருப்பூர்,
கடத்தல்காரர்கள் தங்கம், போதைப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களைத்தான் நூதனமான முறைகளில் வெளிநாடுகளுக்குக் கடத்துவார்கள். இப்போது அதைத் தாண்டிய புதிய உத்தியில் ரூ.5.17 கோடி மதிப்பிலான 11.25 மெட்ரிக் டன் செம்மரங்களைக் கடத்தி மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினரிடம் அகப்பட்டிருக்கிறார்கள் 6 பேர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதிகளில் செம்மரங்களை வெட்டி செதுக்கி லாரிகளில் ஏற்றுவது, அதன் மேலும் கீழும் அழுகிய காய்கறி மூட்டைகளை அடுக்கி விடுவது, பிறகு அவற்றை திருப்பூர் கொண்டு வந்து குடோனில் பதுக்குவது, அங்கிருந்து அவற்றை வேஸ்ட் பனியன் பீஸ்களுக்கு மத்தியில் வைத்து பார்சல்களாக்கி கண்டெய்னர்களி்ல் இட்டு சென்னை துறைமுகதிற்கு கொண்டு போய் கப்பல் மூலம் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்குக் கொண்டு போய் விற்பது... இதுதான் இவர்களின் புது டெக்னிக்.
ஒரு கடத்தலில் சித்தூர், திருப்பூர், சென்னை, மலேசியா என இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுவானேன்? அதில்தான் இருக்கிறது க்ரைம், த்ரில்லர் கதைகளை மிஞ்சும் சுவாரஸ்யம்.
வரி ஏய்ப்பு செய்து நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கும், அங்கிருந்து நம் நாட்டிற்கும் கடத்தப்படும் பொருட்களையும், கடத்தல்காரர்களையும் பிடிக்கும் பிரிவுகளில் ஒன்று டி.ஆர்.ஐ எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை. இதன் கோவை மண்டல அதிகாரிகளுக்கு இன்ஃபார்மர் மூலம் ஆந்திர மாநிலம் சித்தூர், கும்மிடி, ரோலுபாடு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வெட்டப்படும் சந்தனமரங்கள் திருப்பூர் கொண்டு வரப்பட்டு குடோன் ஒன்றில் பதுக்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. செம்மரம் கொண்டு வரப்படும் லாரி எண் போலி, அது அடிக்கடி மாற்றப்படுகிறது, ஆனால் அதன் அடையாளங்கள் இவை என விவரமும் தெரிவித்துள்ளார் இன்ஃபார்மர்.
அந்த அடையாளங்களுடன் திருப்பூர் கணபதிபாளையம் டி.கே.டி மில் அருகில் ஈச்சர் லாரி ஒன்றைப் பிடித்துள்ளனர். அதனுள் துர்நாற்றம் வீசும் கெட்டுப் போன காய்கறி மூட்டைகளே இருக்க அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. அந்த மூட்டைகளை அவிழ்த்துப் பார்க்க, அதில் சுமார் 2 டன் செம்மரக்கட்டைகள் கிடைத்தன. லாரி டிரைவர் உதுமுன் பாரூக்கை (வயது 33) விசாரித்ததில் பக்கத்தில் இருந்த குடோனை கை காட்டியுள்ளார். அங்கே 9.25 டன் செம்மரக்கட்டைகள் அகப்பட்டன. குடோனில் இருந்த முபாரக் (வயது 39), கார்த்திக் (வயது 26) இருவருமே தாம் திருப்பூர் ஸ்டார் நிட்வேர் என்ற பனியன் கம்பெனி ஒன்றின் நிர்வாக இயக்குநர், மேலாளர் என்று போலி விசிட்டிங் கார்டுகளைத் தந்தனர்.
தொடர் விசாரணையில் முபாரக் கோவை உக்கடத்தில் பிரியாணிக்கடை நடத்தியதும், கார்த்திக்கின் வசிப்பிடம் சென்னை மண்ணடி என்பதும், சில திரைப்படங்களில் ஸ்டண்ட் நடிகராக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. விசாரணை நடத்தியபோதே இவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டதால், அவர்களிடமிருந்து தொடர்பு கிடைக்காததால் மேலும் 4 பேர் குடோனுக்கு வலிய வந்து மாட்டியுள்ளனர். அவர்கள் சையது அப்துல் காசிம் (வயது 31), குட்டி (எ) அப்துல் ரகுமான் (39), நரேந்திரன் (வயது 46), தமீம் அன்சாரி (36).
நரேந்திரன் என்பவர்தான் இவர்களுக்கு மூளை. இவர் மீது சிங்கவால் குரங்கு, நட்சத்திர ஆமை போன்ற அரிய வகை விலங்குகள், அபூர்வ பறவைகள் உடல் பாகங்களைத் தாய்லாந்து, சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியாவிற்கு கடத்திய வழக்கு சில ஆண்டுகள் முன்பு மும்பையில் பதிவாகி தலைமறைவாகியவர், தொடர்ந்து செம்மரக் கடத்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
செம்மரங்கள் நம் வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட மரங்கள் வகைப்பட்டியலில் உள்ளது. அதை சொந்தமாக வளர்த்தால் கூட அதை வெட்டவும், விநியோகிக்கவும் வனத்துறையிடம் நிறைய நடைமுறை விதிமுறைகள் உள்ளன. நரேந்திரன் திருப்பூரிலிருந்து 2016-லேயே 3 டன் செம்மரக் கட்டைகளை மலேசியாவிற்குக் கடத்தியுள்ளார். ஆந்திராவில் சட்டவிரோதமாக வெட்டப்படும் செம்மரங்கள் உள்ளூர் ஆட்கள் மூலம் ஒரு டன் ரூ.4 லட்சத்திற்குக் கிடைக்கிறது.
அதுவே சீனா, துபாய், மஸ்கட், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒரு டன் ரூ. 45 லட்சம் தாண்டி விற்கிறது. ஆந்திராவிலிருந்து நேரடியாக துறைமுகத்திற்கு கொண்டு போய் கப்பலில் ஏற்றுவதென்றால் சந்தேகம் வரும். அதனால் பனியன் ஏற்றுமதி மிகுதியாக நடக்கும் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியின் பெயரை போலியாக வைத்துக்கொண்டு, ஏதாவது ஒரு அசல் ஏற்றுமதி நிறுவனத்தின் பெயரை இணையத்தில் டவுன்லோடு செய்து, அதிலிருந்து தாம் கொண்டு போகும் பொருட்களுக்கு போலியாக பில் தயார் செய்து, அதன் மூலம் ஏற்றுமதி ஏஜென்சிகளை அணுகி, பனியன் பார்சல்கள் (செம்மரங்களை சுற்றிலும் வேஸ்ட் பனியன் பீஸ்களை சுற்றி) போல் கப்பலில் ஏற்றுவதுதான் நரேந்திரனின் கடத்தல் டெக்னிக்.
நரேந்திரனுடன் முபாரக், காசிம் ஆகியோர் 3 வருடங்களுக்கு முன்பே கூட்டணி சேர்ந்துள்ளனர். செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டு வந்தனர். கார்த்திக் சென்னை மண்ணடியில் ஒரு டீக்கடை நடத்தி வந்தபோது சந்தித்தனர். அதன்பிறகு அவரும் இவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார். கிடைக்கும் தொகையில் அனைவருக்கும் சமமான தொகை பங்கிட்டும் வந்துள்ளனர்.
இதையெல்லாம் என்னிடம் விவரித்த மத்திய வருவாய் புலனாய்வு உயர் அதிகாரி கூறுகையில், ''கோவை பிரியாணிக்கடைக்காரர் முபாரக் திருப்பூரில் நிட்டிங் எக்ஸ்போர்ட் நிர்வாக இயக்குநர் என சொல்லியே குடோன் வாடகைக்கு எடுத்துள்ளார். கடத்தலுக்காகவே வேனை போலிப் பதிவு எண்ணுடன் தயார் செய்துள்ளார் டிரைவர் உதுமன் பாரூக். பனியன் ஏற்றுமதிக்கான ஒரிஜினல் பில்லை ஆன்லைனில் எடுத்து, அதில் சில திருத்தம் செய்தே போலி பில் தயாரித்துள்ளார் நரேந்திரன். செம்மரக் கட்டைகளை சின்னச்சின்ன துண்டுகளாக்கி பனியன் துணி வைத்து மூடி கப்பல் கார்கோவில் சேர்க்கும் பணியில் அனைவருமே ஈடுபட்டுள்ளனர்.
வேன் டிரைவர் உதுமன் பாரூக் ஏற்கெனவே பல்வேறு கடத்தல் வழக்கில் சிறை சென்றவர். இவர் தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவில் எந்தந்த செக்போஸ்ட் வழியாகச் சென்றால் கடத்தல் பொருட்களைக் காப்பாற்றலாம் என்பதை அத்துபடியாகத் தெரிந்து வைத்துள்ளார். செம்மரங்களை ஆந்திராவிலிருந்து கொண்டு வர கெட்டுப் போன காய்கறி மூட்டைகளைப் பயன்படுத்தியது கூட இவரின் கைவண்ணம்தான். லாரி சோதனைக்கு மாட்டும் போது அடிக்கிற துர்நாற்றத்தைப் பார்த்தே அதிகாரிகள் விலகி ஓடி விடுவார்கள் அல்லவா? அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதில் நாங்கள் இதுவரை பிடித்திருப்பது 7 பேர்தான். அதில் நரேந்திரனை மும்பை போலீஸார் அங்கிருக்கும் வழக்குக்காகக் கொண்டு போயுள்ளனர். மற்றவர்கள் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இன்னமும் பெரிய நெட் வொர்க் உலக அளவில் இருக்கலாம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்!'' என்றார்.
- கா.சு.வேலாயுதன்
முக்கிய செய்திகள்
க்ரைம்
20 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
5 days ago