கரூர்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளம் ஆக்கிரமிப்பு குறித்து தகவல் அளித்த தந்தை, மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றியம் முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை என்கிற ராமர் (70). இவர் கோயில் பூசாரி. மனைவி தாமரை (65), திருமணமாகாத இரு மகள்கள் உள்ளனர். மகன் வண்டு என்கிற நல்லதம்பி (44). இவர் மனைவி தமிழரசி (32). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
திருச்சி இனாம்குளத்தூரில் வசித்த வீரமலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் முதலைப்பட்டிக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் மல்லிகை, ரோஜா பூக்களை பயிரிட்டு விற்பனை செய்து வந்துள்ளார்.
முதலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான குளம் ஒன்று உள்ளது. 196 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக இருந்த குளத்தை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், அரசியல்வாதிகள் உதவியோடு 157 ஏக்கர் குளத்தை பட்டா போட்டு ஆக்கிரமித்துள்ளனர்.
தற்பொழுது அந்த குளத்தில் மீதமுள்ள 39 ஏக்கர் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டுமென வழக்கறிஞர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு வீரமலை, நல்லத்தம்பி அளித்த தகவலால்தான் தொடுக்கப்பட்டதாக ஆக்கிரமிப்பாளர்கள் அவர்கள்மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த வாரம் தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் வருவாய்த் துறையினரோடு சம்பந்தப்பட்ட குளத்தை ஆய்வு செய்தனர். கடந்த 25-ம் தேதி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், நில அளவையர் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை ஆய்வு செய்து அளவீடு செய்தனர்.
அப்போது வீரமலை, அவர் மகன் நல்லதம்பி ஆகிய இருவரும் ஆக்கிரமிப்பு இடத்தின் எல்லைப் பகுதிகளை அதிகாரிகளிடம் அடையாளம் காட்டினர். இதனால் ஆக்கிரமிப்பாளர்கள் வீரமலை மற்றும் அவர் மகன் மீது கோபத்தில் இருந்தனர். நல்லதம்பி இன்று (திங்கள்கிழமை) காலை அவரது தோட்டத்தில் பறித்த பூக்களை திருச்சி மார்க்கெட்டில் சென்று விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
முதலைப்பட்டி அருகே வரும்போது - மர்மநபர்கள் அரிவாளால் அவரது காலில் வெட்டியுள்ளனர். அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததும் அவரது கழுத்தில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே நல்லதம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த கும்பல் வீரமலையைத் தேடி சென்றது. அப்போது வீரமலை, தனது பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். வீரமலையை வழிமறித்த அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொன்றது. பேரனைக் கொலை செய்ய அந்தக் கும்பல் முயன்றபோது அவர் அங்கிருந்து ஓடி உயிர் தப்பியுள்ளார்.
தந்தை, மகன் கொல்லப்பட்டது குறித்து பொதுமக்கள் போலீஸாருக்குப் புகார் அளிக்க சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாரன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொலையாளிகளிடம் தப்பிய பேரனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் 3 பேரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ஜி.ராதாகிருஷ்ணன்
முக்கிய செய்திகள்
க்ரைம்
5 hours ago
க்ரைம்
8 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
23 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago