ஊராட்சி கவுன்சிலர் கொலைக்கு பழிக்குப் பழியாக நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 5 பேர் போலீஸாரிடம் சரணடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நீதிமன்ற வாயிலில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இந்நிலையில், நேற்று காலை நீதிமன்ற வளாகத்துக்குள் இருந்து 7 பேர் கொண்ட கும்பல், ஒருவரை விரட்டிக் கொண்டு வந்தது. அவர் நீதிமன்ற வாயில் வழியாக தப்பியோட முயன்றார். நீதிமன்றம் முன்பு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய அந்த கும்பல், அங்கிருந்து காரில் தப்பிவிட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சிதறி ஓடினர். தொடர்ந்து, நீதிமன்ற வாயிலில் கூடிய வழக்கறிஞர்கள், காவல் துறைக்கு எதிராக கோஷமெழுப்பினர். நீதிமன்றத்திலேயே பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து, மாநகர காவல் துணை ஆணையர் விஜயகுமார் மற்றும் போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர் கீழநத்தம் மேலூர் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி (38) என்பதும், கீழநத்தம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. எனவே, ராஜாமணி கொலை சம்பவத்துக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் ஆணையர் ரூபேஷ்குமார் மீனா கூறும்போது, “கொலை சம்பவம் தொடர்பாக கீழநத்தம் கீழூரைச் சேர்ந்த இருதயராஜ் என்ற ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சுரேஷ், மனோஜ், சிவா, தங்கமகேஷ், மனோராஜ் ஆகியோர் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற வாயிலில் பாதுகாப்பு குளறுபடி குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்” என்றார்.
» அரசு கல்லூரிகளில் 4 ஆயிரம் பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை: உயர்கல்வி துறை அமைச்சர் தகவல்
» இந்தியா - மாலத்தீவுகள் மகளிர் கால்பந்து அணிகள் 2 ஆட்டங்களில் மோதல்
தலைவர்கள் கண்டனம்: நெல்லையில் நீதிமன்றம் முன்பு இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: நீதிமன்றம் முன்பே படுகொலை நடந்துள்ளது திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துவிட்டதை உணர்த்துகிறது. நிர்வாகத் திறன் இல்லாத, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்காத முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை: நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி படுகொலை மற்றும் நெல்லையில் நீதிமன்றம் முன்பு நடந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இதேபோல, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு: நெல்லை படுகொலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது நீதிபதிகள், "பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்துக்குள் ஒருவரை துரத்தி கொலை செய்துள்ளனர். அங்கு பணியில் இருந்த போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர்? கொலையாளிகளை காலில் சுட்டு அல்லது அவர்கள் தப்பிச் சென்ற காரின் சக்கரத்தையாவது சுட்டுப் பிடிக்க முற்பட்டிருக்கலாமே?" என்று கேள்வி எழுப்பினர்.
மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "நீதிமன்ற வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீஸார் ஒருவரை அந்த இடத்திலேயே கைது செய்துள்ளனர்" என்றார். அதையடுத்து நீதிபதிகள், "நெல்லை படுகொலை தொடர்பாகவும், மாவட்ட நீதிமன்றங்களில் அளிக்கப்படும் போலீஸ் பாதுகாப்பு தொடர்பாகவும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டு, விசாரணையை டிச.21-ம் தேதி (இன்று) மாலைக்கு தள்ளிவைத்துள்ளனர்.
அமைச்சர் விளக்கம்: தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சமூக வலைதளத்தில், "போலீஸார் உடனடியாக செயல்பட்டு கொலையாளியை கைது செய்துள்ளனர். ஆனால், வழக்கம்போல சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சித் தலைவர் விமர்சிக்கிறார். அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறிய பழனிசாமிக்கு சட்டம்-ஒழுங்கு பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
11 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
13 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
5 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago
க்ரைம்
6 days ago