மதுரை: மதுரையில் பள்ளிகள், ஓட்டல்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினரும் திணறி வருகிறார்கள்.
மதுரை நரிமேடு பகுதியில் செயல்படும் மத்திய அரசு பள்ளி மற்றும் 3 தனியார் பள்ளிகளுக்கு கடந்த மாதம் 30-ம் தேதி ஒரே சமயத்தில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் ராமசாமி தலைமையில் அந்த பிரிவு காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட 4 இடங்களிலும் சோதனை நடத்தினர். அதன் பிறகு தான் அது வதந்தி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று மதுரை சின்னசொக்கிகுளம், காளவாசல், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் பெருங்குடி பகுதியிலுள்ள 4 நட்சத்திர ஓட்டல்களுக்கு இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. அந்த ஓட்டல்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் காவல்துறையினர் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடைசியில், அதுவும் வெறும் புரளி என, தெரியவந்தது.
இப்படி பள்ளிகள் மற்றும் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை மாநகர், மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும், குற்றவாளிகளை இன்னமும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. இதற்கிடையில், மதுரை மாவட்டம் பேச்சிகுளம் பகுதியிலுள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அந்தப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கடைசியில், அதுவும் விஷமிகளின் வேலை என தெரியவந்தது. இந்த நிலையில், மதுரை பழங்காநத்தம், பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள பிரபலமான 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று இ- மெயில் மூலம் மிரட்டல் வந்தது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். ஆனால், அங்கு எவ்வித வெடிப்பொருட்களும் சிக்கவில்லை.
இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டலையடுத்து அந்தப் பள்ளிகளின் மாணவ - மாணவியர் அவசர அவசரமாக பெற்றோர்கள் உதவியுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இப்படி மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக 4 முறை பள்ளிகள் மற்றும் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் காவல்துறையினரும், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களும் உஷாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தங்களை போலீசாரால் நெருங்க முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள ஒரே கும்பல் தான் இப்படி மாறி மாறி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மக்களை பீதி அடைய வைத்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து கொண்டு இத்தகைய மிரட்டல்களை விடுப்பதாகவும் போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல்களை விடுத்து வரும் கும்பலை போலீஸார் நெருங்க முடியாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலும் இந்த மிரட்டல்கள் வதந்தியாக தான் இருக்கின்றன என்றாலும் பொதுமக்கள் மத்தியில் இது ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தி வருவதை மறுப்பதற்கில்லை.
இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகிறார்கள். வெளிநாடுகளில் ஒளிந்து கொண்டு விஷமிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகச் சொல்லப்பட்டாலும் இதுபோன்ற தகவல்களை உதாசீனப்படுத்தக் கூடாது என்பதற்காக முறைப்படி சோதனைகளை நடத்தி வருகிறோம். அதேசமயம், வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களை கண்டுபிடிக்கவும் சைபர் க்ரைம் போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
முக்கிய செய்திகள்
க்ரைம்
6 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
10 hours ago
க்ரைம்
12 hours ago
க்ரைம்
1 day ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
2 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
3 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago
க்ரைம்
4 days ago