நாமக்கல்லில் ஏடிஎம் கொள்ளைக் கும்பலை சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீஸ்: என்கவுன்ட்டரில் ஒருவர் பலி

By கி.பார்த்திபன்

நாமக்கல்: கேரள மாநிலத்தில் உள்ள ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் கண்டெய்னர் லாரியில் தப்ப முயன்ற வட மாநிலக் கொள்ளையர்களை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் சினிமா பாணியில் விரட்டிப்பிடித்தனர். சம்பவத்தின்போது போலீஸார் சுட்டதில் கொள்ளையன் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒருவர் காலில் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

3 ஏடிஎம்களில் கொள்ளை: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் வட மாநில கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அந்தப் பணம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு வட மாநிலத்துக்கு தப்ப முயன்றனர்.

நிற்காமல் சென்ற லாரியை மடக்கிப் பிடித்த போலீஸ்: இதுகுறித்து தகவல் அறிந்த கேரள போலீஸார் கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளனர். எனினும், கேரள போலீஸாரின் பிடியில் சிக்காமல் தப்பிய லாரி தமிழக எல்லைக்குள் நுழைந்தது. இந்த லாரி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்பி எஸ்.ராஜேஸ்கண்ணன் தலைமையிலான போலீஸார் குமாரபாளையம் விரைந்து லாரியை மடக்கிப் பிடிக்க முற்பட்டனர். எனினும், அந்த லாரி நிற்காமல் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களை மோதிச் சென்றது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே நாமக்கல் போலீஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட கண்டெய்னர் லாரி

விடாமல் லாரியை துரத்திய போலீஸார் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் லாரியை மடக்கிப் பிடித்தனர். அப்போது அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் லாரி ஓட்டுநரை பிடித்து கீழே தள்ளி தாக்குதலில் ஈடுபட்டனர்.இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து லாரி ஓட்டுநரை போலீஸார் மீட்டனர். மேலும், கண்டெய்னரினுள் கொள்ளையர்கள் இருப்பதை அறிந்த போலீஸார் லாரியை ஆளில்லா இடத்துக்கு கொண்டு சென்று அதனை திறக்க முற்பட்டனர்.

என்கவுன்டர்: அப்போது உள்ளிருந்த வட மாநில கொள்ளையன் ஒருவன் கண்டெய்னரை திறந்த காவல் ஆய்வாளரை கடப்பாறையால் குத்த முற்பட்டார். அதையடுத்து ஆய்வாளர் தனது துப்பாக்கியால் சுட்டதில் அக்கொள்ளையன் உயிரிழந்தார். மேலும், ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து கண்டெய்னருக்குள் சென்ற போலீஸார் உள்ளிருந்து 3 வட மாநில கொள்ளையர்களை பிடித்தனர். மேலும், ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.66 லட்சம் ரொக்கம், பணம் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர் காயம்: இதனிடையே கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் குமாரபாளையத்தில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், போலீஸார் சுட்டதில் காயமடைந்த கொள்ளையன் மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த லாரி ஓட்டுநரும் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் சேலம் சரக டிஐஜி உமா தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும், போலீஸார் பிடியில் சிக்கிய 3 கொள்ளையர்களை வெப்படை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

23 hours ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

1 day ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

2 days ago

க்ரைம்

3 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

4 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

5 days ago

க்ரைம்

6 days ago

க்ரைம்

7 days ago

க்ரைம்

7 days ago

மேலும்