6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் - யார் இந்த சீசிங் ராஜா?

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஞாயிறன்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். குரோம்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனங்களை சீசிங் செய்யும் வேலை செய்து வந்ததால் இவருக்கு சீசிங் ராஜா என்ற அடைமொழி வந்துள்ளது. இவர் மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஞாயிறன்று கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா போலீஸாரால் என்கவுன்ட்டரில் இன்று (செப்.23) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மட்டும் அல்லாமல், தாம்பரம் மாநகரம் சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற குற்ற வழக்கு தொடர்பாகவும் பிரபல ரவுடியான சீசிங் ராஜாவை போலீஸார் தேடி வந்தனர். தாம்பரம் காவல் ஆணையர், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என சீசிங் ராஜாவின் புகைப்படத்துடன் நோட்டீஸ் ஓட்டி தேடி வந்தார்.

என்கவுன்ட்டர்: இதனிடையே, ஆந்திராவில் பதுங்கியிருந்த சீசிங் ராஜாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். இன்று காலை சுமார் 4.30 நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை இஷ்கான் டெம்பிள் பின்புறம் உள்ள கெனால் மன்சாலையில் வைத்து வேளச்சேரி காவல் நிலைய சட்டம் ஒழுங்குஆய்வாளர் விமல் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடமிருந்து சீசிங் ராஜா தப்பிக்க முயன்று,போலீஸாரை தாக்கவும் முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக ஆய்வாளர் விமல் துப்பாக்கியால் சுட்டதில் இடது மார்பில் குண்டு பாய்ந்து சீசிங் ராஜா உயிரிழந்தார்.

யார் இந்த சீசிங் ராஜா? - சிட்லபாக்கம் காவல் நிலைய ஏ பிளஸ் ரவுடியான சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்கு உட்பட 39 வழக்குகள் உள்ளன. 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் குரோம்பேட்டையில் இருசக்கர வாகனங்களை சீசிங் செய்யும் வேலை செய்து வந்ததால் இவருக்கு சீசிங் ராஜா என்ற அடைமொழி பெயர் வந்துள்ளது. இவருக்கு ஜானகி, ஜான்சி, ராஜலட்சுமி ஆகிய மூன்று மனைவிகள் உள்ளனர்.

அடுத்தடுத்த கொலைகள்.... 2006-ம் ஆண்டு செங்கல்பட்டு புறநகர் பகுதியில் கள்ள சாராயம் விற்பதில் ராமு என்பவருக்கும் ரமணி என்பவருக்கும் மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் சீசிங் ராஜா,ராமு உடன் சேர்ந்து ரமணியை பாலூர் காவல் நிலைய எல்லையில் கொலை செய்துள்ளார். 2008-ம் வருடம் தனது நண்பன் ராமுவை கொலை செய்த ரமணியின் கூட்டாளியான நட்ராஜ் என்பவனை சீசிங் ராஜா செங்கல்பட்டு அருகில் உள்ள பரனூர் டோல்கேட் அருகில் வைத்து நட்ராஜை கொலை செய்தார். சீசிங் ராஜா 2009 ம் வருடம் தனது கூட்டாளி சிவிலி (எ) சிவலிங்கத்தை கொலை செய்த விஜி என்பவரை ராஜமங்கலம் காவல் நிலைய எல்லையில் வெட்டி கொலை செய்துள்ளார்.

2010 ம் வருடம் புளியந்தோப்பில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த அற்காடு சுரேஷின் 2-வது மனைவியான அஞ்சலையை சின்ன கேசவலு மிரட்டியதால் பூந்தமல்லி நீதிமன்றம் அருகில் சின்ன கேசவலு மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் ஆகியோரை தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்தார். 2015-ம் வருடம் சீசிங்ராஜா கூட்டாளியான அம்பேத்குமார் என்பவரிடம் பாம் சரவணன் சகோதரரான தென்னரசு என்பவர் பிரச்சினை செய்து வந்ததால் தென்னரசை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெங்கல் காவல் நிலைய எல்லையில் தாமரைபாக்கம் அருகில் கொலை செய்துள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE