புழல் மத்திய சிறையில் 2 நைஜீரிய பெண் கைதிகள் மோதல்: ஒரு பெண் கைதி மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

செங்குன்றம்: சென்னை, புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் பிரிவில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்களான மோனிகா (32), கிளாரக்கா (33) ஆகிய இருவரும் போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.

மோனிகாவும், கிளாரக்காவும் புழல் சிறையின் விசாரணைப் பிரிவில் உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞரைக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இச்சூழலில், நேற்று முன்தினம் பார்வையாளர் சந்திப்பு நேரத்தில், சிறைத் துறை அனுமதியுடன் விசாரணைப் பிரிவில் உள்ள நைஜீரிய காதலருடன் கிளாரக்கா வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசியுள்ளார். பிறகு அவர் அறைக்கு திரும்பினார்.

இதையறிந்த மோனிகா, `என் காதலனுடன்நீ எப்படி பேசலாம்' எனக்கூறி கிளாரக்காவிடம் தகராறில் ஈடுபட்டாராம். தகராறு முற்றிஇருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தில் கிளாரக்காவின் உதட்டை மோனிகா கடித்ததாக கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த கிளாரக்காவை சிறைத் துறையினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கிளாரக்கா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, புழல் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE