என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி ‘சிடி’ மணி துப்பாக்கி முனையில் கைது

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சென்னையை கலக்கிய, ஏ பிளஸ் ரவுடியான பிரபல ரவுடி ‘சிடி’ மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து, சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை மாதம் போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த 18ம் தேதி, வட சென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜியும் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தார். இந்த 2 ரவுடிகளும் பிடிக்கச் சென்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இவர்களை தவிர கடந்த இரண்டரை மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை சென்னையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில்தான், போலீஸாரால் அண்மையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியும், நண்பருமான 'ஏ பிளஸ்'வகையை சேர்ந்த பிரபல ரவுடி சி.டி. மணி (42) சென்னை போலீஸாரால் சேலத்தில் நேற்று நள்ளிரவு துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார்.

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னையை விட்டு தப்பி சி.டி. மணி சேலத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்த தகவலின் பேரில் சென்னை போலீஸார் அங்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

ரவுடி சிடி மணியின் பின்னணி: ரவுடி மணிகண்டன் என்ற சிடி (CD) மணி சென்னை தேனாம்பேட்டை, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர். ஏ பிளஸ் ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 33 குற்ற வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர். தி.நகர் பஜாரில் சிடி கடை வைத்திருந்ததால் இவருக்கு சிடி மணி என்ற அடைமொழி வந்தது. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

இவர், தி.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, இசிஆர், ஓஎம்ஆர் ஆகிய பகுதிகளில் கட்டிட உரிமையாளரிடம் தனது கூட்டாளிகள் மூலம் மாமூல் பெற்று வந்தார். 2007ல் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை மாமூல் வசூல் தொடர்பாக கொலை செய்தார்.

2009ல் இரண்டு சிம்கார்டு போடும் வகை செல்போன் உரிமம் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சங்கர் திவாகரன் என்பவரை கொலை செய்தார். 2009 ஆம் வருடம் தனது கூட்டாளி அடையாறு சிவா என்பவரை வாழைத்தோப்பு சதீஷ் என்பவர் கொலை செய்ததற்காக, வாழைத்தோப்பு சதீஷை தனது கூட்டாளியுடன் கொலை செய்தார்.

2012 ஆம் வருடம் தனது கூட்டாளி முரளி என்பவரை எம்ஜிஆர் நகர் கார்த்திக் என்பவர் ஒயின் ஷாப்பில் வைத்து கொலை செய்ததற்காக, கார்த்திக் கூட்டாளி சுரேஷ் என்பவரை கோட்டூர்புரத்திலிருந்து கடத்திச் சென்று அவரை மதுராந்தகத்தில் வைத்து கொலை செய்தார். அதே 2012 ஆம் வருடம் காத்திக்கை கோட்டூர்புரத்தில் கொலை செய்தார்.

2012 ஆம் வருடம் சிடி மணி சிறையிலிருந்து கொண்டே தனது நண்பன் பாலாஜி என்பவரிடம் ஆலயப்பன் என்பவர் பிரச்சினை செய்ததால் ஆலயப்பனை கூட்டாளிகள் மூலம் கொலை செய்தார். 2013 ஆம் வருடம் தனது கூட்டாளியான சிலோன் மோகன் என்பவர் பிரச்சினை செய்ததால் சிடி மணி, மோகனை தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்து வாலாஜாவில் உள்ள சிவகாமி என்பவரின் தோட்டத்தில் புதைத்துவிட்டார். 2014 ஆம் வருடம் தனது நண்பன் ஹரிஹரன் என்பவனை சிஐடி நகரைச் சேர்ந்த அண்ணாமலை மிரட்டியதால் அவரை கொலை செய்தார். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

தந்தை பேட்டி: இதற்கிடையே சி.டி மணியின் தந்தை பார்த்த சாரதி கண்ணீர் மல்க கூறுகையில், ‘சேலத்தில் எந்தவித குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் சி.டி. மணி குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். வழக்குகளில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் நிலையில் அத்துமீறி வீட்டில் நுழைந்து போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். பல ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு வருவதால், எனது மகன் தற்போது எங்கே உள்ளார்? என்ற விவரங்கள் தெரியாமல் உள்ளது. சி.டி. மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என தெரிவித்தார்.

உயிர் தப்பிய சிடி மணி: காக்கா தோப்பு பாலாஜியும், சிடி மணியும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் காரில் சென்றபோது, பிரபல ரவுடியான எதிர் தரப்பைச் சேர்ந்த சம்பவம் செந்தில் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது. இதில் சிடி மணியும் காக்கா தோப்பு பாலாஜியும் நல்வாய்ப்பாக உயிர் தப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட சம்பவம் செந்தில் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். அவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்திலும் போலீஸார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE