டெலிகிராம் செயலி மூலம் இளைஞரிடம் ரூ.21 லட்சம் மோசடி: ரூ.3.23 லட்சம் மீட்பு @ தூத்துக்குடி

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடியில், இணையதளத்தில் பகுதி நேர வேலை என டெலிகிராம் செயலியில் லிங்க் அனுப்பி ரூ.21 லட்சத்தை மோசடி செய்த வழக்கில் ரூ.3.23 லட்சத்தை சைபர் க்ரைம் போலீஸார் மீட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இணையதளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு என மர்ம நபர்கள் மூலம் டெலிகிராம் செயலியில் லிங்க் வந்துள்ளது. இதையடுத்து அந்த இளைஞர் அந்த லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் கூறப்பட்டுள்ள இணையதளத்தில் முதலீடு செய்து அதன் மூலம் சிறிய தொகையை லாபமாக பெற்றுள்ளார்.

அதிக மூதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் கூறியதையடுத்து, அதனை நம்பி அந்த இளைஞர் பல்வேறு தவணைகளாக அவர்கள் கூறிய 16 வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ரூ.21.07 லட்சத்தை அனுப்பி உள்ளார். ஆனால், அந்தப் பணத்துக்கு லாபம் ஏதும் வரவில்லை. இதனால் அந்த மர்ம நபர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் கூடுதலாக ரூ.15 லட்சம் கட்டினால் மொத்தமாக லாபம் பெறலாம் என்று கூறியுள்ளனர்.

அதன்பிறகு தான், மோசடி செய்யப்பட்டதை அறிந்த அந்த இளைஞர் இதுகுறித்து தேசிய சைபர் க்ரைம் இணையதளத்தில் புகார் பதிவு செய்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி சைபர் க்ரைம் போலீஸ் ஏடிஎஸ்பி-யான சகாய ஜோஸ் மேற்பார்வையில் ஆய்வாளர் (பொ) சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து மோசடி செய்த நபர்களைக் கண்டுபிடிக்க எஸ்பி-யான ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.

இதையடுத்து தனிப்படை போலீஸார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட இளைஞர் அனுப்பிய நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.28,22,141 மோசடி பணத்தை முடக்கினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி, முடக்கம் செய்த பணத்தில் ரூ.3.23 லட்சமானது பாதிக்கப்பட்ட இளைஞரின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மீதி பணத்தை மீட்கவும் மோசடி நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்யவும் சைபர் க்ரைம் போலீஸார் சட்டரீதியாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று பகுதி நேர வேலை, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என இணையதளம், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்றவற்றின் மூலம் வரும் போலியான விளம்பரங்களை நம்பி, அதில் வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். இளைஞர்கள், பெண்கள் இதுபோன்ற போலியான விளம்பரங்களை தவிர்த்து சைபர் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE