புதுச்சேரி: குழந்தையை தத்தெடுக்க முகநூலில் விளம்பரம்; இளைஞரிடம் ரூ.1.7 லட்சம் பறிப்பு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: குழந்தையை தத்தெடுக்க விருப்பமா என முகநூலில் வந்த விளம்பரத்தை நம்பி தொடர்பு கொண்ட புதுச்சேரி இளைஞரிடம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்தை இணையவழி மோசடி கும்பல் ஏமாற்றிப் பறித்துள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் சினோத் (32). இவருக்கு திருமணமாகி பத்தாண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை. இதனால் குழந்தையை தத்தெடுக்க விருப்பப்பட்ட அவர் அன்பு இல்லம் என்ற பெயரில் முகநூலில் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, மறுமுனையில் பேசிய நபர்கள் சினோத்துக்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை அனுப்பி, “உங்களுக்கு இதில் எந்தக் குழந்தை வேண்டும்?” என்று கேட்டுள்ளனர். மேலும், முகநூலில் அவர்களுடைய அன்பு இல்லம் மூலம் பல்வேறு குழந்தைகளை தத்துக் கொடுத்தது போன்ற புகைப்படங்களும் இருந்துள்ளது.

இதனை நம்பிய சினோத் அவர்களிடம் குழந்தை தத்தெடுப்பது குறித்து தொடர்ந்து பேசியுள்ளார். இதைப் பயன்படுத்திக்கொண்ட அவர்கள், குழந்தையை தத்தெடுப்பதில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் இருப்பதாகவும் இதற்கு குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும் என்றும் சினோத்திடம் கூறியுள்ளனர்.

அவர்கள் சொன்னதை நம்பி சினோத் பல்வேறு கட்டங்களாக ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணத்தை கடந்த ஒரு மாதத்தில் அவருக்கு தந்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி சினோத்துக்கு குழந்தையை தத்துக் கொடுக்கவில்லை. ஒருகட்டத்தில் சினோத்தால் அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியாமல் போயிருக்கிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சினோத், இது குறித்து புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து சினோத்திடம் பணத்தை ஏமாற்றிய மர்மக் கும்பலை தேடி வருகின்றனர்.

இது பற்றி சைபர் க்ரைம் எஸ்பி-யான பாஸ்கரன் கூறும்போது, “இணைய வெளியில் வருகின்ற விளம்பரங்கள் எதையும் நம்பி பொருட்களை வாங்கவோ அல்லது வேறு எதற்காகவுமோ பணம் செலுத்த வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE