நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: மனநல ஆலோசகர் போக்சோவில் கைது

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

நாகப்பட்டினம்: நாகை அருகே, உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் பகுதியில் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் 75-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமியர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த காப்பகத்தைச் சேர்ந்த 9 மாணவிகள் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் காப்பகத்தை விட்டு மாயமாகிச் சென்றனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர்.இது தொடர்பாக சத்யா காப்பகத்தில் உள்ள அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் மனநல ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டது.

அதன்படி மனநல ஆலோசனை வழங்க சத்ய பிரகாஷ் என்பவர் நியமிக்கப்பட்டு, மனநல ஆலோசனை வழங்கி வந்தார். அவர் தனது மனநல வகுப்பில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த வகுப்பெடுத்தார். இதனைப் பயன்படுத்தி அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக காப்பகத்தின் கண்காணிப்பாளர் சசிகலா நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வேம்பரசி, சத்ய பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை இன்று (செப்.20) கைது செய்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE