தனியார் பள்ளிக்கு கிருத்திகா உதயநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் தீவிர சோதனை

By பெ.ஜேம்ஸ் குமார்

சோழிங்கநல்லூர்: சென்னை சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் தனியார் கேம்பஸ் கே இன்டர்நேஷனல் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிருத்திகா உதயநிதி பெயரில் இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை சோழிங்கநல்லூர் அருகே தனியார் கேம்பஸ் கே இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் இன்று (செப்.19) காலை 11.30 மணிக்கு அது வெடிக்கும் என்றும் மர்ம நபர்கள் கிருத்திகா உதயநிதி என்ற பெயரில் இமெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகம் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ - மாணவியரையும் வீட்டுக்கு திருப்பி அனுப்பியது. மேலும், பள்ளியின் சார்பில் பெற்றோர்களுக்கு தங்களின் குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த செம்மஞ்சேரி காவல் துறையினர் பள்ளிக்கு வரும் அனைத்து பாதைகளையும் தடுப்புகள் மூலம் அடைத்து பள்ளியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். செம்மஞ்சேரி உதவி ஆணையர் வைஷ்ணவி, செம்மஞ்சேரி ஆய்வாளர் கிளாடிசன் ஜோஸ், உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் வெடிகுண்டு நிபுணர் குழு ராஜ்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். தீவிர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE