59 வழக்குகளில் சிக்கிய ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது எப்படி?

By இ.ராமகிருஷ்ணன்

சென்னை: வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது எதிர்தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தார். அவர் மீது கொலை, கொலை முயற்சி, மாமூல் கேட்டு மிரட்டல் உட்பட 59 வழக்குகள் உள்ளன.

ரவுடிகள் ஒழிப்பு பணியை சென்னை காவல் ஆணையர் முடுக்கிவிட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மகாகவி பாரதியார் நகர் காவல்உதவி ஆய்வாளர் நாதமுனி, காவலர் சுகன் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை 4.32 மணியளவில் முல்லை நகர் சந்திப்பின் பாலம் அருகே அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து அதில் ஓட்டுநர் அருகில் இருந்த நபரை கீழே இறக்கி விசாரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அந்த காரில் இருந்த ஓட்டுநர் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்று தப்பினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி ஆய்வாளர் நாதமுனி இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இரவு ரோந்து பணியிலிருந்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் தப்பிச் சென்ற அந்த காரை அறிந்து மேலும் சில போலீஸாருடன் போலீஸ் வாகனத்தில் விரட்டினார்.

இந்நிலையில், அந்த கார் வியாசர்பாடியில் உள்ள பாழடைந்த பிஎஸ்என்எல் குடியிருப்பு வளாகத்தினுள் சென்றது. விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர் சரவணனும் அங்கு சென்றார். இதையடுத்து காரிலிருந்து இறங்கி தப்பி ஓடிய அந்த நபர், அங்கு மறைந்து இருந்தவாறு தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் காவல் ஆய்வாளர் சரவணனை நோக்கி 2 முறை சுட்டார். முதல் குண்டு காவல் வாகனத்தின் முன் பக்க கண்ணாடியிலும், அடுத்த குண்டு காவல் வாகனத்தின் இடதுபுற முன்பக்க கதவிலும் பாய்ந்தது.

இதையடுத்து தற்காப்புக்காக துப்பாக்கியால் பதிலுக்கு ஆய்வாளர் சுட்டதில் இடது மார்பில் குண்டு பாய்ந்து அந்த நபர் இறந்தார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸாரின் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (43) என்பது தெரியவந்தது.

ஏ பிளஸ் ரவுடியான இவர் மீது 6 கொலை, 17 கொலை முயற்சி உட்பட 59 வழக்குகள் உள்ளன. 12 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். என்கவுன்ட்டர் தொடர்பாக வியாசர்பாடி போலீஸார் விசாரிக்கின்றனர். மேலும், மாஜிஸ்திரேட் விசாரணையும் நடக்கிறது. காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற இரண்டரை மாதங்களில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம், தற்போது காக்கா தோப்பு பாலாஜி என இருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.

பின்னணி விவரம்: பாரிமுனை, பி.ஆர்.என். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர்தான் பாலாஜி. இந்த பகுதி முன்பு காக்கா தோப்பு என அழைக்கப்பட்டதால் அதை அடைமொழியாக வைத்தே காக்கா தோப்பு பாலாஜி என அழைக்கப்பட்டார். மண்ணடி பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்த பாலாஜி, அதன்பிறகு பிரபல ரவுடிகளான நித்தியானந்தம் மற்றும் கல்வெட்டு ரவி ஆகியோருடன் சேர்ந்து லாரி ஷெட்டுகளில் மாமூல் வசூலித்துள்ளார். தொடக்ககாலங்களில் அவர் வசித்து வந்தபகுதியில் இருந்த லாரி ஷெட்மேஸ்திரி யுவராஜை பணத்துக்காக கொலை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு 2009-ல் விநாயகம், 2011-ல் சரவணன், 2013-ல்ராஜி, வெங்கட்டா என அடுத்தடுத்து 6 பேர் கொலை வழக்கில் சிக்கினார்.

வடசென்னையில் காக்கா தோப்பு பாலாஜி, ரவுடி சம்போசெந்தில் தலைமையில் இரு கும்பலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டன. அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற மோதலும் இருந்துள்ளது. பிரபல ரவுடியான சி.டி.மணியின் வலதுகரமாகவும் காக்கா தோப்பு பாலாஜி செயல்பட்டுள்ளார். இவர்களை கொலைசெய்ய 2020-ல் அண்ணா சாலையில் அவர்கள் சென்ற கார் மீதுரவுடி சம்போ செந்தில் தரப்புவெடிகுண்டுகளை வீசியது. இதில் இருவரும் தப்பினர்.

அதன் பின்னர் வேறு குற்ற வழக்கில் சிறை சென்று, வெளியே வந்த காக்கா தோப்பு பாலாஜி, பதுங்கி இருந்தபடி திரை மறைவில்ரவுடியிசத்தை தொடர்ந்துள்ளார். போலீஸாரின் நெருக்கடியால் இருப்பிடத்தை கடலூருக்கு மாற்றிய நிலையில்தான் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளார்.

‘ரவுடி சம்போ செந்தில்தான் காரணம்' - ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காக்கா தோப்பு பாலாஜியின் தாய் கண்மணி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ரவுடி சம்போ செந்திலை பிடித்தால்தான் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு முடியும். ஆனால் அவர் பலருக்கு பணம் கொடுத்து சரிகட்டிவிட்டார். இப்போது என் மகனை போலீஸார் என்கவுன்ட்டர் செய்துவிட்டதால், சம்போ செந்திலும் போலீஸில் சிக்குவார். வேலூரில் தினமும் கையெழுத்து போட்டு வரும் என் மகன் தலைமறைவாக இருக்க வாய்ப்பே இல்லை. என் மகனிடம் துப்பாக்கி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக பாலாஜி எந்த தவறும் செய்யவில்லை. திருந்தி வாழ்ந்து வந்தான். என் மகன் இறப்புக்கு சம்போ செந்தில்தான் காரணம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE